×

கொளத்தூர், திருவிக நகர் தொகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடத்தில் அமைச்சர்கள், மேயர் ஆய்வு

பெரம்பூர்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ெதாடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திருவிக நகர் தொகுதி புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 70 அடி ரோடு சிவ இளங்கோ சாலை, பெரவள்ளூர், வண்ணாங் குட்டை பகுதி ஆகிய இடங்களில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டனர். மேலும், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தனர். அப்போது, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, திருவிக நகர் மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், கொளத்தூர் பகுதி திமுக செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் மற்றும் மண்டல அதிகாரிகள் உடனிருந்தனர். தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, வ.உ.சி நகர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, காசிமேடு, ராயபுரம், மண்ணடி, பாரிமுனை பூக்கடை, சவுகார்பேட்டை, மூலக்கொத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

மேலும், சாலைகள் குண்டு குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு தொடர் மழையின்போது, சென்னை மேயர் பிரியா திடீரென  4வது மண்டலத்துக்குட்பட்ட சிபி ரோடு, ஜேஜே நகர், மணலி சாலை பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, வடக்கு வட்டார இணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 தொடர் மழையின் காரணமாக வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய ஆடு தொட்டி சாலை போஜராஜன் நகர் காட்பாடா மற்றும் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு வஉசி நகர், சீனியம்மன் கோயில் தெரு, கொருக்குப்பேட்டை ஜேஜே நகர், ஸ்டான்லி நகர், எழில் நகர், தண்டையார்பேட்டை வஉசி நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி திமுக செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், திமுகவினர்  மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர். மேலும், வடசென்னை  பகுதியில் மழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் ஹர்ஷ்சிங், பூக்கடை, பாரிமுனை, எண்ணூர் விரைவு சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரடியாக பார்வையிட்டார். மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் மழைநீர் அகற்றப்படுவது குறித்து கேட்டறிந்தார். போக்குவரத்து பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக போக்குவரத்தை சரி செய்யவும் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார்.



Tags : Ministers ,Mayor ,Kolathur ,Thiruvika Nagar , Ministers, Mayor inspect rainwater ponds in Tiruvik Nagar constituency, Kolathur
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...