வடிகால் பணி நடந்த பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கவில்லை; மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டி

சென்னை: சென்னையில் இத்தனை மாதங்கள் நடந்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு பலன் கிடைத்துள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை முழுவதும் சுமார் 2 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மழைநீர் அகற்றும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக நீண்ட கால பிரச்னைகள் ஓரளவுக்கு சரியாகி உள்ளது. தி.நகர், ஜி.என் செட்டி சாலை, மாம்பலம், கொளத்தூர் பகுதிகளில் கனமழை பெய்த போதிலும், பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை. மழைக் காலத்தில் சில சமயங்களில் இலை, தழைகள், குப்பையால் வடிகாலில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மழைநீர் தேங்க இதுவும் ஒரு காரணம். இதை கண்காணித்துச் சரி செய்ய 15 ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்களை களத்தில் இறக்கியுள்ளோம். ஊழியர்கள் இரவு முதலே ரோந்து பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். முக்கிய சாலைகளில் எங்கும் பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. அதை சரி செய்யும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். தேவையென்றால் கூடுதல் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றவும் தயாராக உள்ளோம். காலை முதல் 20,000க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களும் மழைநீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.  கடந்த ஆண்டு எல்லாம் மழை வந்தாலே சீத்தம்மாள் காலனி பகுதிகளில் 10 நாட்கள் வரை மழைநீர் தேங்கும்.

ஆனால், நேற்று முன்தினம் அதிக மழை பெய்தும் கூட அங்கு தண்ணீர் தேங்கவில்லை. ஜிஎன் செட்டி சாலை, ராகவாச்சாரி சாலைகளில் பொதுவாகவே மழை பெய்தால் 4, 5 நாட்கள் வரை நீர் தேங்கும். ஆனால், நேற்று 150 மிமீ மேல் மழை பெய்தும் கூட மழை நீர் தேங்கவில்லை. கே.கே.நகர், ராஜமன்னார் சாலை பகுதிகளிலும் மழை நீர் தேங்கவில்லை. நீர் விரைவாக வடிந்துவிட்டது. புளியந்தோப்பு பகுதியிலும் முக்கிய சாலைகளில் மழைநீர் இல்லை. சில கிளை தெருக்களில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது. அதுவும் மெல்ல வடிந்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தான் மழை நீர் தேங்குகிறது. அங்கும் கூட நீரை உடனடியாக வெளியேற்ற நிரந்தரமாக மழை நீரை அகற்ற பம்ப் வசதி ஏற்படுத்தி உள்ளோம். அது மிகச் சிறப்பாகவே செயல்படுகிறது. மாநகராட்சி மூலம் வடிகால் பணிகள் செய்யப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. இத்தனை மாதங்களாக நாங்கள் செய்த மழை நீர் வடிகால் பணிகளுக்கு பலன் கிடைத்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: