×

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்; சிறப்பு அதிகாரி கணேசன் அறிவுரை

திருவொற்றியூர்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கனமழை கால சிறப்பு அதிகாரி கணேசன் ஐஏஎஸ்  உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழை துவங்கியதை முன்னிட்டு, சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மணலி மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமை வகித்தார். உதவி ஆணையர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
மழைக்கால சிறப்பு அதிகாரி கணேசன் ஐஏஎஸ் கலந்துகொண்டு மண்டலத்துக்குட்பட்ட 8 வார்டுகளிலும் பருவமழை எதிர்கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் உபகரணங்களில் தேவைகள் குறித்து கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்வாரியம் தீயணைப்பு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை போன்ற அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, கணேசன் ஐஏஎஸ் பேசியதாவது: கடந்த பெருமழையின் போது மணலி புதுநகர், சடையங்குப்பம், ஆண்டார் குப்பம், எம்ஜிஆர் நகர் போன்ற பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

மாநகராட்சி அதிகாரிகளின் கூட்டு முயற்சி, தீவிர நடவடிக்கையால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அப்போது ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் அனுபவங்களை கொண்டு இந்த பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர பணியாற்ற வேண்டும். மேலும், தாழ்வாக உள்ள இடங்களில் நீரேற்று மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புதிதாக போடப்பட்ட மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், பழைய கால்வாய்கள் தூர்வார வேண்டும்.

படகுகள், மணல் மூட்டைகள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும், தேவைப்படுபவர்களுக்கு பாய், பெட்ஷீட், போன்றவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எந்த இடத்திலும் பொதுமக்களுக்கு சிறிய பாதிப்புகள் கூட ஏற்படக்கூடாது. இவ்வாறு பேசினார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் தீர்த்தி, நந்தினி, ராஜேஷ்சேகர், ஸ்ரீ தர் ஆறுமுகம், சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : north-east ,Special Officer ,Ganesan , All departmental authorities should work together to deal with Northeast Monsoon; Special Officer Ganesan advised
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...