×

டிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது; ராகுல் திட்டவட்டம்

திருமலை:‘டிஆர்எஸ்-காங்கிரஸ் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது தெலங்கானாவில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஐதராபாத்தில் நடைபயணம் செய்தபோது அவர் அளித்த பேட்டி வருமாறு: இந்தியாவில் நீதித்துறை, நிர்வாகத்துறை, ஊடகத்துறையின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது ஆர்எஸ்எஸ் பிடியிலிருந்து இத்துறைகளுக்கு விடுதலை அளிப்போம்.

காங்கிரஸ் - தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கூட்டணி குறித்த கேள்விக்கே இடமில்லை. அது குறித்து தவறான கருத்து பரப்பப்படுகிறது. பாஜ.வின் சித்தாந்தத்தை காங்கிரஸ் சித்தாந்தத்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்பதே நிதர்சன உண்மை. காங்கிரஸ் ஜனநாயக கட்சி. அது, எங்களுடைய மரபணுவில் உள்ளது. நாங்கள் சர்வாதிகாரத்துடன் செயல்பட மாட்டோம். காங்கிரஸ் தலைவர் சமீபத்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆர்எஸ்எஸ்.சும், பாஜ, டிஆர்எஸ் கட்சிகளும் எப்போது தங்கள் கட்சிக்கு தேர்தல் நடத்துவார்கள் என்று ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : TRS ,Rahul , No alliance with TRS party; Rahul plans
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...