×

நானே ராஜா, நானே மந்திரி போர்டு உறுப்பினர்கள் கூண்டோடு டிஸ்மிஸ்; டிவிட்டரில் மஸ்க் ரணகளம்

நியூயார்க்: டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் தனது அடுத்த அதிரடியாக போர்டு உறுப்பினர்களை கூண்டோடு நீக்கி, அவர் மட்டுமே ஒற்றை தலைமையாக அறிவித்துள்ளார். பிரபல சமூக ஊடகமான டிவிட்டரை சமீபத்தில் வாங்கிய, உலகின் நம்பர்-1 பணக்காரரான எலான் மஸ்க் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார். டிவிட்டர் சிஇஓ.வாக இருந்த இந்திய வம்சாவளி பராக் அகர்வால் உள்ளிட்டவர்களின் வேலையை காலி செய்த மஸ்க், டிவிட்டரில் புளூடிக் கணக்கு வேண்டுமென்றால் மாதம் ரூ.1600 கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார். பல அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் அவர்களின் சரிபார்க்கப்பட்ட உண்மையான கணக்கு என்பதற்கு அங்கீகாரமாக ‘புளூடிக்’ வழங்கப்படுகிறது. இதற்கு மாத கட்டணம் செலுத்த வேண்டுமென்ற மஸ்க்கின் திட்டம், உலக முழுவதும் டிவிட்டர் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அடுத்த அதிரடியாக டிவிட்டரின் ஒட்டுமொத்த போர்டு உறுப்பினர்களை கூண்டோடு நீக்கி விட்டு, அவர் மட்டுமே போர்டு உறுப்பினர் என பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் நேற்று ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இந்த புதிய போர்டு தற்காலிகமானது எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார். ஒரு நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடியது போர்டு உறுப்பினர்களே. அப்படியிருக்கையில், மஸ்க் மட்டுமே போர்டு உறுப்பினராக இருப்பதால் அவர் இஷ்டத்திற்கு எந்த முடிவையும் எடுக்கலாம். ஏற்கனவே, டிவிட்டரில் மஸ்க்குக்கு பிறகு அதிகமான பங்குகளை (ரூ.15.5 ஆயிரம் கோடிக்கு) சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலாலின் கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அரசியல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய டிவிட்டர் போன்ற பிரபல சமூக ஊடகத்தில், அமெரிக்க அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சவுதி நிறுவனம் அதிக பங்குகளை கொண்டிருப்பது அந்நாட்டு அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Nane Raja ,Nane Minister ,Musk ,Twitter , Nane Raja, Nane Minister board members dismissed with cage; Musk's battleground on Twitter
× RELATED எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில்...