20 ஐம்பொன் சிலைகள் கொள்ளை சம்பவம் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உட்பட 6பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம்: தொன்மையான 20 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உட்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தொன்மையான 20 ஐம்பொன் சிலைகள் கடந்த 2008ம் ஆண்டில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விக்ரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2012ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் இருந்த சுபாஷ் சந்திர கபூரை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட சிலைகளில் நடராஜர், விநாயகர், வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, சக்கரத்தாழ்வார் ஆகிய 6 சிலைகள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. இந்தவழக்கு தொடர்பாக சுபாஷ் சந்திர கபூர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பரபரப்பான சிலை திருட்டு வழக்கை விசாரித்த கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ் சந்திர கபூர் (73) மற்றும் சென்னையை சேர்ந்த சஞ்சீவ் அசோகன் (60), பாக்கியகுமார் (50), மதுரையை சேர்ந்த மாரிச்சாமி (65), ஸ்ரீராம் என்கிற சுலோகு (52), பார்த்திபன் (55) ஆகிய 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், குற்றவாளி சுபாஷ் சந்திர கபூருக்கு ரூ.4 ஆயிரம் அபராதமும், மற்ற 5 குற்றவாளிகளுக்கும் ரூ.8 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

Related Stories: