×

ஒன்றிய அரசின் நிதி நிறுத்தி வைப்பு எதிரொலி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒப்பந்த அலுவலர்கள் 346 பேர் பணி நீக்கம்

வேலூர்: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த மாநிலம் முழுவதும் 346 வட்டார திட்ட அலுவலர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1975ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதை தவிர்க்கவும், அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 439 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இம்மையங்களில் பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்பட்டு வருகிறது. இம்மையங்களால் பயன்பெறும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டாலும் குறிப்பிட்ட சதவீத குழந்தைகள் ரத்த சோகை, குள்ளமான வளர்ச்சி போன்ற பாதிப்புகளால் அவதியுறுவது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு போஷான் அபியான் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் 80 சதவீதம், மாநில அரசின் 20 சதவீதம் நிதி பங்களிப்புடன் வட்டார அளவில் அங்கன்வாடி மைய குழந்தைகள் ரத்த சோகை, குள்ளமான வளர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் 346 வட்டார அளவிலான உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு அங்கன்வாடி மையங்கள் கண்காணிக்கப்பட்டன. இவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஒன்றிய அரசு திடீரென வட்டார அளவிலான உதவியாளர்களுக்கு வழங்கி வந்த 80 சதவீத ஊதிய பங்களிப்பை நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் வட்டார அளவிலான உதவியாளர்கள் 346 பேரையும் கடந்த மாதம் 31ம் தேதியுடன் பணிநீக்கம் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் வட்டார அளவிலான உதவியாளர்களாக பணிபுரிந்து வந்த 346 பேரையும் பணியில் இருந்து நீக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Union Government , 346 contract officers of the Integrated Child Development Program have been dismissed in response to the withholding of funds by the Union Government
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...