நெல்லையில் சொத்துக்காக பெற்ற தாயை எரித்துக் கொன்ற மகன்: மனைவியுடன் அதிரடி கைது

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரில் வீட்டில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டியை பெற்ற மகனே எரித்துக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவரது மகன் மற்றும் மருமகளை போலீசார் கைது செய்தனர். பாளை. கேடிசி நகர், மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் சிவசுப்பு மனைவி அரசம்மாள் (70). இவரது மகன் அண்ணாமலை (48). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சிவசுப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அரசம்மாள், மகன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அரசம்மாளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து ஒரே வீட்டில் அரசம்மாள் தனியாக ஒரு அறையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி அரசம்மாள் வீட்டின் மாடிக்கு செல்லும் பகுதியில் இருந்து புகைமூட்டம் வெளியேறியது. இதைப் பார்த்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், பாளை. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளை. தீயணைப்பு வீரர்கள், அங்கு தீயை அணைத்து விட்டு பார்த்தபோது, மூதாட்டி அரசம்மாள் கரிக்கட்டையாகி கிடந்தார். இதுகுறித்து பாளை. தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அரசம்மாள் பேரில் வீடு இருக்கும் நிலையில், அவருக்கும், மகன், மருமகள் இடையே தொடர்ந்து சொத்து பிரச்னை நிலவி வந்துள்ளது. சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்கக்கோரி இருவரும் அரசம்மாளிடம் தகராறு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 29ம்தேதி சொத்து பிரச்னை முற்றி, அண்ணாமலை, அவரது மனைவி அனிதா(42) இருவரும் அரசம்மாளை பிடித்து தள்ளியுள்ளனர். இதில் தடுமாறி விழுந்த அரசம்மாளை வீட்டுக்கு பின்புறத்தில் இருந்த விறகு கட்டைகளுக்கு மத்தியில் தீ வைத்து எரித்து விட்டனர். இதில் அரசம்மாள் கருகி பிணமானது தெரிய வந்தது. இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக பாளை. தாலுகா போலீசார் கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர். சொத்துக்காக பெற்ற தாயை மகனே எரித்துக் கொன்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: