×

புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அமலான நாளில் நிலத்தின் அன்றைய சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வரும் முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புதிய சட்டம் அமலுக்கு வந்த நாளில் அப்போதைய நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என்று ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த நிலத்திற்கான இழப்பீடு நில உரிமையாளருக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2013ல் நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. இந்த சட்டம் 2014 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, சட்டம் அமலுக்கு வந்த நாளில் குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்கக் கோரி ஐகோர்ட்டில் வெங்கடேஷ்வரா கல்வி அறக்கட்டளை உள்ளிட்டோர் சார்பில் பல வழக்குகள் தொடரப்பட்டன.  

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால் அந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில் சம்மந்தப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும். சட்ட விதிகளை அமல்படுத்தினால் மட்டும் போதாது. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். தொழிற்பூங்கா அமைக்க 2010ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வந்த 2014ம் ஆண்டு ஜனவரியில் அந்த நிலங்களுக்கான சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டை மீண்டும் நிர்ணயித்து தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Madras High Court ,Tamil Nadu govt , Madras High Court directs Tamil Nadu govt to provide compensation at current market value of land on effective date of new Land Acquisition Act
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...