×

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது இந்த ஆண்டு மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்: அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தது. இந்த ஆண்டு மழைநீர் தேங்காமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு இயல்பாக 448 மி.மீ. மழை கிடைக்கும். இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், இயல்பான மழை அளவை விட கூடுதலாக 35% முதல் 75% வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 43 நீர்த்தேக்கங்கள் 75% முதல் 100% வரையும், 17 நீர்த்தேக்கங்களில் 50% முதல் 75%  வரையும் நிரம்பியுள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மிகமிக அவசரமான நிலையில் - அவசியமான ஒரு பிரச்னையை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இங்கே கூடியிருக்கிறோம். ‘வருமுன் காப்பதே அரசு - வந்த பின் திட்டமிடுவது இழுக்கு’ என்கின்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து மாவட்ட நிர்வாகமும் ஆயத்த நிலையில் இருப்பதாக அனைத்து  கலெக்டர்களும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஒரு பிரச்னையை எதிர்கொள்ள நாம் நம்மை ஆயத்தப்படுத்தி கொண்டால், அந்த பிரச்னையை முழுமையாக வென்றுவிட்டதாகவே அது அமைந்துவிடும். அந்த அடிப்படையில், எந்தவித பேரிடரையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதை அறிந்து உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழையும். சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதன் அறிகுறியாக நேற்று முன்தினம் முதலே மழை பெய்ய தொடங்கி விட்டது. மிக கனமழை - கனமழை - சில இடங்களில் சூறாவளி காற்று ஆகியவை இருக்கக்கூடும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதனை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு நாம் பெருமழையை சந்தித்தோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கெல்லாம் மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தது.

இதேபோல் மற்ற சில மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மீண்டும் அதேபோன்ற ஒரு நிலை எங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து, அதற்கான வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அவர் அளித்த ஆலோசனையின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்கள் அனைத்திலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் முடிந்திருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

இம்முறையும் மழைநீர் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாதவாறும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தினுடைய கடமையும் பொறுப்பும் ஆகும். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய முக்கிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்குத்தான் இருக்கிறது. இதனை உங்களது சார்நிலை அலுவலர்கள் அனைவருக்கும் நீங்கள் உணர்த்தி செயல்பட வைக்க வேண்டும். குறிப்பாக, மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதன்படி,
* பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டல குழுக்கள் அமைக்க வேண்டும்.
* மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.
* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாக்க அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும்.
* பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* பழுதடைந்த / பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
* வயல்வெளிகளில் பயிர் சேதம் ஏற்படாத வகையில் மழைநீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்குதல், பால் விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கல், சமுதாய உணவுக்கூடம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
* கரையோர பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை முன்னதாக வழங்க வேண்டும்.
* மாநகர மற்றும் நகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் அது தொடர்புடைய பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய்த்துறை, பொதுப்பணி துறை, தீயணைப்பு துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித்தனியாக இயங்காமல், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசு துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிறு தவறு என்றாலும் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும். அதேநேரத்தில் சிறு உதவி என்றாலும், அது பெரிய நல்ல பெயரையும் ஏற்படுத்தும் என்பதையும் யாரும் மறந்துவிட வேண்டாம். இயற்கை பேரிடர் காலம் என்பது ஒரு அரசுக்கு சவாலான காலம். அந்த சவாலை மக்கள் ஆதரவோடு சேர்ந்து நாம் அனைவரும் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

* அரசின் பணிகளை பொதுமக்கள் பாராட்ட வேண்டும்
ஒவ்வொரு மாநகராட்சி பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். நிவாரண மையங்களில் பொதுமக்களை தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர்களுக்கு தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படவேண்டும். பொதுத்தொலைபேசி எண்களை பரப்ப வேண்டும், நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும், பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். மொத்தத்தில்  மக்களை காக்க வேண்டும். அது ஒன்றே நம்முடைய இலக்கு. நம்முடைய கவனத்திற்கு வரும் பிரச்னைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தர வேண்டும். தொலைபேசி மூலமாகவோ, வாட்ஸ்அப் வழியாகவோ வரக்கூடிய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுங்கள். அதிகாரிக்கு அனுப்பினோம், உடனே சரிசெய்து கொடுத்தார்கள் என்று பொதுமக்கள் சொல்வதுதான், மிகப்பெரிய பாராட்டாக இருக்க முடியும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

Tags : Chief Minister ,M K Stalin , Last year's floods were the biggest challenge to ensure that rainwater does not stagnate this year: Chief Minister M K Stalin's order to all district administrators
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...