தீவிரம் அடைந்தது வடகிழக்கு பருவமழை 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: அதிகபட்சம் 20 செ.மீ. வரை பெய்யும்

சென்னை: தீவிரம் அடைந்து  வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அதிகபட்சமாக 20 செமீ வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக இலங்கை முதல் வடதமிழகம் வரை நீடித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தரைப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை நகரத் தொடங்கியது. அதனால், டெல்டா மாவட்டம் முதல் வடதமிழகம் வரை நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி நேற்று பகல் முழுவதும் மழை பெய்தது. இன்னும் சில இடங்களில் மழை தொடர்கிறது.  

அதில் அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 50 மிமீ முதல் 150 மிமீ வரை மழை பெய்துள்ளது. செங்குன்றம் 130மிமீ, பெரம்பூர் 120மிமீ, சென்னை துறைமுகம், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம்,கும்மிடிப்பூண்டி, ராமநாதபுரம், பொன்னேரி 100 மிமீ, அயனாவரம், சென்னை நுங்கம்பாக்கம், சோழவரம் 90மிமீ, நந்தனம், அண்ணா பல்கலைக் கழகம் 60மிமீ, மழை பெய்துள்ளது. இந்நிலையில், கடலோரப் பகுதியில் இருந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு - வட மேற்கு நோக்கி நேற்று முன்தினம் இரவு நகர்ந்து செல்லும்போது, மேகத்துக்கு மேலே வெப்பம் உயர்ந்த காரணத்தால், குளிர் அலைகள் பின்னுக்கு  தள்ளப்பட்டன. அதன் காரணமாக நேற்று காலையில் இருந்து பகல் முழுவதும் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்து கொண்டு இருந்தது.

இந்நிலையில், மேலும் அந்த வெப்பம் காரணமாக குளிர் அலைகள் மேலும் பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு ஏற்பட்டதால் ராணிப்பேட்டை முதல் தெற்கு ஆந்திரா வரை மழை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழை முதல் கனமழை பெய்யும். மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

இந்த பருவமழை 5ம் தேதி வரை தொடர்ந்து வட மாவட்டங்களில் பெய்யும் என்றும், பின்னர் 8ம் தேதி வரை தென் மாவட்டங்களில் பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த கால புள்ளிவிவரங்களை பார்க்கும்போது கடந்த 30 ஆண்டுகளில் சென்னையில் நவம்பர் 1ம் தேதி 8 செமீ முதல் 10 செமீ வரை மழை பெய்துள்ளது இதுவே முதல்முறை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பருவமழை நேற்று முன்தினம் விடிய விடிய பெய்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த மழை தொடர்ச்சியாக 8ம் தேதி வரை பெய்யும் வாய்ப்புள்ளதால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலைமைக்கு ஏற்ப விடுமுறை அறிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மழை பாதிப்புகளை சமாளிக்க பல ஆயிரம் பணியாளர்கள் பாதுகாப்பு, வடிகால், மீட்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து உடனடியாக நீரை வெளியேற்ற மோட்டார்களும் தயார் நிலையில் வைக்க அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று முதல் இந்த பணிகள் நடந்து வருகிறது.

வட கிழக்கு பருவமழை குறித்து வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள கருத்து கணிப்புகள்:

* தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 20 செமீ வரை மழை பெய்யும்.

* தற்போதுள்ள காற்று சுழற்சி 3ம் தேதி அளவில் அரபிக் கடல் நோக்கி செல்லும், அதற்கு பிறகு படிப்படியாக  வட மாவட்டங்களில் மழை குறைந்தாலும் தென்மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்யும்.

* 7ம் தேதி வரை இந்த மழை தென் மாவட்டங்களில் அதிக அளவில் பெய்யும்.

* அரபிக் கடல் பகுதியில்  இருந்து வீசும் காற்றின் காரணமாக 7ம் தேதி வரை குமரி மாவட்டத்தில் மழை பெய்யும்.

* புதிய காற்றழுத்தம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் 10ம் தேதியில் உருவாகும். அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி டெல்டா மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வரும். பின்னர் அது வடக்கு நோக்கி நகர்ந்து வட கடலோர மாவட்டங்களை நெருங்கும். 11, 12 ம் தேதிகளில் சென்னை நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: