×

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் விநியோகம்: நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மாதங்களுக்கு பிறகு நள்ளிரவு 12 மணி முதல் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கொரோனா பரவல் காலத்தில் வந்தவர்களுக்கு திருப்பதி அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் ஸ்டாண்ட எதிரே உள்ள தேவஸ்தானத்தின் சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கப்பட்டது.

இந்த டிக்கெட் இல்லாதவர்களை சுவாமியை தரிசிக்க அனுமதிக்கவில்லை. இதனால் டிக்கெட் பெற அதிகளவு பக்தர்கள் திரண்டதால்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இலவச தரிசன டிக்கெட் வழங்குவது கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டு நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதித்ததால் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் நிரம்பியதும் 5 கி.மீ. தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுமார் 30 மணி நேரத்திற்கு பிறகு சுவாமியை தரிசனம் செய்தனர்.

எனவே பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சர்வ தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. சனி, ஞாயிறு, திங்கிட்கிழமைகளில் தினமும் 25 ஆயிரம் டிக்கெட் என்றும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் எனவும் வழங்கப்படும். பக்தர்களின் வருகையை பொருத்து இதில் மாற்றம் செய்யப்படும். ஏற்கனவே திருப்பதியில் வழங்கப்பட்ட பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை மற்றும் ரயில் நிலையம் பின்புறம் உள்ள சத்திரம் ஆகிய இடங்களில் 30 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் டிக்கெட் வழங்கப்பட்டது.

இவ்வாறு டிக்கெட் பெற்றவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த டிக்கெட் பெறாமல் வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான தரிசன நேரத்தில் காத்திருந்து தரிசனம் செய்யலாம். இலவச தரிசன டிக்கெட் பெற ஆதார் கார்டு முக்கியம். இந்த டிக்கெட் பெற்றவர்கள் தரிசனம் செய்தாலும், செய்யாவிட்டாலும் மாதத்தில் ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். வாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசன டிக்கெட் இனி திருப்பதி மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் வழங்குவதுடன் அதே இடத்தில் அந்த பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும் என்று செயல் அதிகாரி தர்மா தெரிவித்தார்.

ஒரே மாதத்தில் ரூ.122.8 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், காணிக்கையாக நகை மற்றும் பணத்தை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீவாரி உண்டியல்களில் செலுத்தி வருகின்றனர். மேலும், சிலர் நன்கொடையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் உண்டியல் காணிக்கை தொடர்ந்து 8வது மாதமாக ரூ.100 கோடியை தாண்டி உள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் உண்டியல் மூலம் ரூ.122.8 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஏழுமலையான் கோயிலில் உண்டியல் வருவாய் தொடர்ந்து ரூ.100 கோடியை தாண்டி பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். கோயில் வரலாற்றில் கடந்த ஜூலை மாதம் முதல் முறையாக  ரூ.139.35 கோடி வருவாய் கிடைத்து குறிப்பிடத்தக்கது.

Tags : Thirupati Ezumalayan , Tirupati Eyumalayan, free time allocation ticket distribution for darshika, arrangement to avoid long waiting time
× RELATED தென்மேற்கு பருவமழை மே 19-ல் துவங்க வாய்ப்பு