×

திருவாடானை வட்டாரத்தில் மண் பரிசோதனை ஆய்வகம் வேண்டும்

திருவாடானை : திருவாடானை வட்டாரத்தில் மண் பரிசோதனை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். மாவட்டத்திலேயே அதிகளவில் திருவாடானை தாலுகாவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. இதனால் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இந்த தாலுகாவில் வேளாண்மை துறை அலுவலகம், தோட்டக்கலைத் துறை அலுவலகம் என விவசாயம் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்தும் மண் பரிசோதனை செய்ய மண் பரிசோதனை ஆய்வகம் நிறுவப்படவில்லை. மாவட்டத்திலேயே பரமக்குடியில் மட்டும் மண் பரிசோதனை ஆய்வகம் உள்ளது. அதிக விளைநிலங்கள் உள்ள திருவாடானை தாலுகாவில், மண் பரிசோதனை ஆய்வகம் அமைக்க வேண்டுமென விவசாயிகள்பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சாகுபடிக்கு வளமான மண் தேவை இப்பகுதியில் உள்ள கிராமங்களில் வளமான மண் இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் இயற்கை உரங்களை தவிர்த்து ரசாயன உரங்களை அதிகமாக பயிருக்கு இட்டு வருகின்றனர். இதனால் மண்  மலட்டு தன்மை ஏற்பட்டு மகசூல் குறைந்து கொண்டே வருகிறது. எனவே மண்ணில் என்ன குறைபாடு உள்ளது என கண்டறிய மண் பரிசோதனை அவசியமாகிறது. ஆனால் இங்கு மண் பரிசோதனை ஆய்வகம் இல்லாததால், பரமக்குடிக்கு சென்று மண்ணை விவசாயிகள் ஆய்வு செய்வது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. எனவே அதிக நிலப்பரப்பு உள்ள திருவாடானை தாலுகாவில் மண் பரிசோதனை ஆய்வகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

The post திருவாடானை வட்டாரத்தில் மண் பரிசோதனை ஆய்வகம் வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tiruvadanai ,Tiruvadani ,Thiruvadani ,Thiruvadan ,Dinakaran ,
× RELATED வயல்களில் தேங்கிய தண்ணீரால் நெல் விதைப்பு பணி தாமதம்