கர்நாடகாவில் பள்ளியில் நடக்கும் நாடகத்தில் நடிக்க பகத் சிங்கின் தூக்கு தண்டனையை ஒத்திகை பார்த்த மாணவர் மரணம்

சித்ரதுர்கா: கர்நாடகா பள்ளியில் நடக்கும் நாடக நிகழ்ச்சிக்காக பகத் சிங்கின் தூக்கு தண்டனையை தனது வீட்டில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த எஸ்எல்வி பள்ளியில் சஞ்சய் கவுடா (12) என்ற மாணவர் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாடக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் வேடத்தில் நடிக்க சஞ்சய் கவுடா நியமிக்கப்பட்டார்.

அதையடுத்து அவர் தனது வீட்டில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். பகத் சிங்கின் வசனங்களை பேசிக் கொண்டு, அவரை தூக்கிட்ட சம்பவத்தை ஒத்திகை பார்த்த போது, தற்செயலாக தூக்கு கயிற்றில் சஞ்சய் கவுடா மாட்டிக் கொண்டார். அந்த நேரத்தில் அவரது பெற்றோர் வீட்டில் இல்லை. சிறிது நேரம் கழித்து வந்த அவர்கள், மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சஞ்சய் கவுடா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகத் சிங் நாடக ஒத்திகையின் போது மாணவர் இறந்த சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: