×

தமிழ்நாட்டுடன் இணைந்த நாள்; கன்னியாகுமரிக்கு வயது 66: வளம் சார்ந்த வளர்ச்சியை எதிர்நோக்குகிறது

கன்னியாகுமரி மாவட்டத்தின் இன்றைய நிலப் பகுதிகள் 1956 வரை திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1945 முதல் 1956 வரையிலான காலகட்டம் அதன் தற்காலிக வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 1945ல் திருவாங்கூர் மாகாணத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கினைந்த கேரள மாநிலம் உருவாக்குவதற்காக ஒரு தீர்மானம் திருவாங்கூர் மாநில காங்கிரசால் நிறைவேற்றப்பட்டது. திருவாங்கூர் மாகாணத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழி அதன் அங்கீகாரத்தை இழந்து மலையாளம் மட்டுமே மாநிலத்தின் ஆட்சி மொழியானது.

இதனை தமிழர்கள் ஒரு அவமானமாகக் கருதினர். இதற்கு எதிராக குரல் கொடுக்க 1946 ஜூன் 30ல் அனைத்து திருவாங்கூர் தமிழ் காங்கிரஸ் உருவானது. கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான இயக்கத்தை மார்ஷல் நேசமணி வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றார். 1947ல் திருவாங்கூர் மாநிலம் இந்திய யூனியனின் ஒரு பகுதியானது. 1948ல் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் குமரி மாவட்டத்தை முந்தைய மெட்ராஸ் மாகாணத்துடன் இணைப்பதற்கான அழுத்தம் கொடுத்தது. அதன் பேரில் அப்போதைய இந்திய யூனியனின் துணைப் பிரதமரான சர்தார் வல்லபாய் படேல் இக்கோரிக்கையை ஏற்று மொழி அடிப்படையில் மாநில மறு சீரமைப்பின் போது இதை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளித்தார்.

 1949 ல் திருவாங்கூர் மற்றும் கொச்சின் மாகாணத்தை இணைக்கும் முயற்சிக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டம் நடந்த போதிலும் 1949 ஜூன் முதல் நாளன்று இரண்டு மாநிலங்களும் இணைக்கப்பட்டன. 1951ல் பொதுத்தேர்தல். 1952ல் சட்டசபையில் மாநில காங்கிரஸ்சுக்கு அளித்து வந்த ஆதரவை திருவாங்கூர் தமிழ் மாநில காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால் அந்த அமைச்சரவை கவிழ்ந்தது. 1954ல் மீண்டும் தேர்தல் நடந்தது. தமிழ் பேசும் பகுதிகளில் உள்ள 12 தொகுதிகளிலும் திருவாங்கூர் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்று அதன் பலத்தை உயர்த்திக் கொண்டது.

காலப்போக்கில் திருவாங்கூர் மாநில காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து ஏ.நேசமணி தலைமையில் ஒரு பிரிவும், தாணுலிங்க நாடார் தலைமையில் ஒரு பிரிவுமாக செயல்பட்டனர். மீண்டும் 1954ல் மார்ச் 29ல் இரு அணிகளும் இணைந்து பி.ராமசாமிபிள்ளை  கட்சியின் தலைவரானார். அதன் பின்னர் நடந்த கிளர்ச்சிகள், போராட்டங்கள், கடை அடைப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் விளைவாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய உயிர்களை இழக்க வேண்டி இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டதன் காரணமாக அமைச்சரவை கவிழ்ந்தது.

திருவாங்கூர் கொச்சின் மாநிலத்தின் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1955 முதல் ஏ.நேசமணி திருவாங்கூர் தமிழ் காங்கிரசின் தலைவரானார். 1956 மாநில சீரமைப்புகக் குழு உருவாக்கப்பட்டது. திருவாங்கூர் மாநிலத்தின் தெற்கு தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை மெட்ராஸ் மாநிலத்திற்கு மாற்ற இந்தக் குழு முடிவு செய்தது. 1956 நவம்பர் 1ம் தேதி தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு நாகர்கோவிலை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1966, 1976ல் புதிய வருவாய் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. தீர்வைத்துறை உருவாக்கப்பட்டது. 1976ல் வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டன. 2012லும் வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்கள் புதியதாக உருவாக்கப்பட்டு குமரி மாவட்டத்தில் தாலுகாக்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாவட்டம், படித்தவர்கள் நிறைந்த மாவட்டம், வறியவர்கள் குறைந்த மாவட்டம் என்று பல்வேறு பெருமைகள் நிறைந்தது. மீன்பிடி தொழில், ரப்பர் உற்பத்தி, உப்பு உற்பத்தி என்று இயற்கை வளங்களுக்கும் பஞ்சமில்லை.

புகழ்பெற்ற நாஞ்சில் நாட்டில் குறையும் விவசாய நிலங்கள், உடைக்கப்படும் மலைக்குன்றுகள், மாய்ந்து போன பாசன குளங்கள் மக்களுக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. கிடப்பில் கிடக்கும் 4 வழி சாலை திட்டம் மாவட்டத்தில் வாகன போக்குவரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. குமரி மாவட்டம் பகுதிகள் தாய் தமிழகத்துடன் இணைந்து ஆண்டுகள் 66 கடந்து விட்டது. நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியது காலத்தின் கட்டாயம். மாவட்டம் இன்றும் வளம் சார்ந்த வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.


Tags : Tamil Nadu ,Kanyakumari , date of merger with Tamil Nadu; Kanyakumari turns 66: Looking forward to resource-driven growth
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி...