×

வெளிநாட்டில் கார் விபத்து நடிகை ரம்பா உயிர் தப்பினார்

சென்னை: வெளிநாட்டில் நடிகை ரம்பா தனது குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அந்த கார் திடீரென்று விபத்துக்குள்ளானது. இதில் அவரது மகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரம்பா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தமிழில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் பிரபலமானவர், ரம்பா. தொடர்ந்து பல்வேறு மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நூற்றுக்கணக்கான படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கனவுகன்னியாகத் திகழ்ந்த அவர், சில படங்களை சொந்தமாகத் தயாரித்து பலத்த நஷ்டம் அடைந்தார்.

இந்நிலையில், கனடா நாட்டின் தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை காதல் திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்ட அவர், பிறகு 2 மகள்கள், ஒரு மகன் என்று 3 குழந்தைகளுக்கு தாயானார். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை நாள்தோறும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் அவர், சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்திருந்தார். தனது பழைய தோழிகளான நடிகைகள் குஷ்பு, மீனா, சங்கீதா கிரிஷ், சங்கவி, பிரீதா ஹரி உள்பட பலருடன் இணைந்து வெளியிடங்களுக்கு சென்று ஜாலியாக பொழுதுபோக்கினார்.

இந்நிலையில், நேற்று திடீரென்று ரம்பா தான் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதனுடன் சில போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும், தனது குழந்தைகளும் லேசான காயத்துடன் உயிர் தப்பியதாகவும், அதே நேரத்தில் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். விபத்துக்குள்ளான காரின் போட்டோக்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Ramba , Car accident abroad, actress Ramba,
× RELATED இந்த வார விசேஷங்கள்