×

அரக்கோணம் அருகே தக்கோலத்தில் கட்டிட ஆக்கிரமிப்புகள் அகற்றியதை தொடர்ந்து அழகுராஜ பெருமாள் கோயில் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்

* பல்லவர் கால கல்வெட்டுகளுடன், சிதைந்த மூலவர் சிலை கண்டெடுப்பு

வேலூர்: அரக்கோணம் அடுத்த தக்கோலம் அழகுராஜ பெருமாள் கோயில் தொடர்பாக தினகரன் நாளிதழ் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக அக்கோயில் வளாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு அகழாய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம், தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஊர் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் யாரும் மறுக்க முடியாது. பல்லவர் தொடங்கி விஜயநகர காலம் வரை பல போர்களை கண்ட வடுக்களை தன்னகத்தே கொண்டு தற்போது அழகான வயல்வெளிகள் சூழ்ந்த அழகான ஊராக தக்கோலம் விளங்குகிறது.

இவ்வூரில் 7 சிவன் கோயில்களும், 7 விஷ்ணு கோயில்களும் இருந்ததாக  கூறப்படுகிறது. ஆனால் இதில் சிவன் கோயில்கள் மட்டும் இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. விஷ்ணு கோயில்கள் மட்டும் தேடவேண்டிய நிலையில் உள்ளன. இதில் ஊருக்கு நடுவில் ஒற்றை ராஜகோபுரம் மட்டுமே சிதிலமடைந்த நிலையில் இங்கு ஒரு விஷ்ணு கோயில் இருந்தது என்ற அடையாளத்துடன் பரிதாபமாக காட்சி அளித்து கொண்டிருந்தது. கோயில் வளாகம் முழுவதும் குடியிருப்புகளாக உருமாறி, அந்த குடியிருப்புகளுக்கு செல்லும் நுழைவு வாயிலாக ராஜகோபுரம் மாறிப்போயிருந்தது.

அதேநேரத்தில் இங்கிருந்த கோயிலில் இருந்ததாக கூறப்படும் உற்சவர் அங்குள்ள ஜலநாதீஸ்வரர் கோயிலில் தஞ்சமடைந்திருந்தார். இந்த உற்சவருக்கு அங்குள்ள இளைஞர்கள் சனிக்கிழமைதோறும் வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான், ஜலநாதீஸ்வரர் கோயில் தொடர்பாக இங்குள்ள இளைஞர்கள், சிதிலமடைந்த ராஜகோபுரம் பற்றியும், அங்கு அழகுராஜ பெருமாள் கோயில் தொடர்பாகவும் தினகரனுக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து கோயில் குறித்து முழு விவரங்களை திரட்டிய தினகரன் குழு, இக்கோயில் தொடர்பாக, இக்கோயிலை அறநிலையத்துறை பட்டியலில் சேர்த்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயிலை மீட்டெடுத்து, அதன் வரலாற்று தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை குறிப்பிட்டு விரிவான செய்திக்கட்டுரையை 2017ம் ஆண்டு வெளியிட்டது.

தொடர்ந்து அழகுராஜ பெருமாள் கோயில் தலவரலாறு தினகரன் ஆன்மீக மலரில் வெளியானது. அதோடு நிற்காமல் தொடர்ந்து அக்கோயில் மீட்பு தொடர்பாக கட்டுரை, செய்திகளாக வெளியிட்டதுடன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் தொடர் முயற்சியை மேற்கொண்டது. இதன் பலனாக 2018ம் ஆண்டு அறநிலையத்துறை பட்டியலில் அழகுராஜ பெருமாள் கோயில் இணைக்கப்பட்டதுடன், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தொடர் நடவடிக்கையுடன், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற சட்டரீதியான நீதிமன்ற நடவடிக்கையும் அறநிலையத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அங்கு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த அனைத்து குடியிருப்புகளும் இடித்து அகற்றப்பட்டன. இந்த நிலையில் அங்கு கடந்த ஒரு வாரகாலமாக அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் கோயிலின் சிதைந்த தூண்கள், கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதோடு மூலவர் அழகுராஜ பெருமாளின் சிலையும் கண்ெடடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோயில் கட்டுமானத்தின் அடித்தளத்தை  வைத்து கோயிலின் வரைபடம் தயாரிக்கும் பணியும் ஒருபக்கம் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தினகரனின் முழு முயற்சியால்தான் அறநிலையத்துறை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் இதற்காக போராடியது. இதில் தக்கோலம் மக்கள் மட்டுமல்ல, தினகரன் பங்கும் அளப்பரியது. அகழாய்வு நடந்து முடிந்த பின்னர் கோயில் கட்டுமானம் நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தினகரன்
தக்கோலத்தில் ஜலநாதீஸ்வரர் ஆன்மீக கட்டுரைக்காக சென்ற போது 2017ம் ஆண்டு அவ்வூர் இளைஞர்களின் தகவலின் பேரில் அழகுராஜ பெருமாள் கோயில் இருந்த இடத்தை தினகரன் குழு பார்வையிட்டு தகவல்களை திரட்டி முதலில் புராண, வரலாற்று தகவல்களுடன் குறிப்பிட்டு கோயில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்கப்பட்டு மீள்கட்டமைக்கப்பட வேண்டும் என்று செய்திக்கட்டுரை வெளியிட்டது. அத்துடன் நில்லாமல் இக்கோயிலை அறநிலையத்துறை பட்டியலில் இணைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முயற்சியை மேற்கொண்டது.

மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் அழகுராஜ பெருமாள் கோயில் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் செய்திகளை வெளியிட்டதுடன் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை தொடர்பாக மக்களின் கோரிக்கையை எடுத்துக்கூறி வந்தது. அதற்கேற்ப ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோயிலை மீட்டெடுத்து கட்டமைக்க அகழாய்வு பணி நடந்து வருகிறது.

பல்லவர் காலத்தை சொல்லும் கோயில்
தற்போது கிடைத்த கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இது முறைப்படி வெளியாகும்போது பல வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம். அதேநேரத்தில் இக்கோயில் பல்லவர் காலத்தை சேர்ந்தது. சோழர்கள், விஜயநகர பேரரசின் காலங்களில் மேம்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதன் மூலம் கோயில் 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றை தன்னுள் கொண்டுள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி கூறும் தக்கோலம் மக்கள்
தக்கோலம் கிராம மக்கள் சார்பில் ஆறுமுகம், சுரேஷ்குமார் ஆகியோர் கூறும்போது,  ‘திருமாலின் கருமை நிறத்துடன் தொடர்புடைய தலவரலாறு கொண்ட இந்த கோயிலை  மீட்டெடுப்பதில் தினகரன் பங்கை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம். கோயில்  முழுமையாக எழுந்து நிற்கும்போது அந்த பெருமையில் உங்களுக்கும் பங்குண்டு’  என்று கூறினர்.

Tags : Sakuraja Perumal Temple ,Dakkolam ,Arakonam , Following the removal of encroachments, the excavation work for the construction of Akur Raja Perumal Temple in Thakolam near Arakkonam is in full swing.
× RELATED வளமான இந்தியாவிற்கு...