×

சேலம் நகராட்சி உருவான 157வது ஆண்டு தினம் இன்று கொண்டாட்டம்: பல கோடி திட்டப்பணிகளால் புதுப்பொலிவு பெறுகிறது

சேலம்: சேலம் நகராட்சி உருவான 157வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பல கோடி மதிப்பில் நடைபெறும் திட்டப்பணிகளால், புதுப்பொலிவு பெற்று வருகிறது. சேலம் மாவட்டத்திற்கு சைலம், சேரலம், ராசாச்சாரிய சதுர்வேதி மங்கலம் என்று பெருமை மிகுந்த பெயர்கள் ஏராளம். சேலத்தின் வரலாறு 2ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடாரிகள், கத்திகள், பானைகள், தேய்ப்பு கற்கள், வளையல்கள் போன்றவை இங்கு கிடைத்திருப்பதே அதற்கான பெரும் சான்று. ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து 17ம் நூற்றாண்டு வரை பாண்டியர்கள், பல்லவர்கள், ஹொய்சாளர்கள், மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட  பகுதியாக இருந்துள்ளது.

18ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மொகலாய மன்னர் ஹைதர்அலி, திப்புசுல்தான் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக மாறியுள்ளது. பிரிட்டீஷ் கிழக்கிந்திய படைக்கும், திப்புசுல்தானுக்கும் இடையே 1792ல்  நடந்த போரைத் தொடர்ந்து, ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்  திப்புவிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளை கொண்டு, பாராமஹால்  என்னும் சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வகையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவானது சேலம். இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என்று 4 மாவட்டங்கள் ஒருங்கிணைந்து இருந்தது. அலெக்ஸாண்டர் ரீட், மாவட்டத்தின் முதல் கலெக்டராக பொறுப்பேற்றார். இந்த வகையில் 230ஆண்டுகளை  கடந்த பெருமைக்குரியது சேலம் மாவட்டம்.

கடந்த 1866ம் ஆண்டு நவம்பர் 1ம்தேதி, சேலம் நகரசபை உருவாக்கப்பட்டது. சேலம் நகராட்சி உருவான 157வது  ஆண்டு தினம், இன்று கொண்டாடப்படுகிறது. 1917ல் மக்களால் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகராட்சி தலைவராக மூதறிஞர் ராஜாஜி பொறுப்பேற்றார். 1994ம் ஆண்டு சேலம் நகராட்சி, மாநகராட்சியாக தரம்  உயர்த்தப்பட்டது. விவசாயம் பிரதானம் என்றாலும் நெசவு, வெள்ளி,  இரும்புத்தொழில்களிலும் சிறந்து விளங்கும் சேலம், தமிழகத்தின் 5வது ெபரிய  மாநகரமாக திகழ்கிறது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் குமாரமங்கலம்  பகுதியை சேர்ந்த சுப்பராயன், 1926ம் ஆண்டு  மெட்ராஸ் மாகாண முதல்வராக  பதவியேற்றார். இதற்கடுத்து மூதறிஞர் ராஜாஜியும் முதல்வராக பொறுப்பு வகித்தார்.

1936ம் ஆண்டில், டி.ஆர்.சுந்தரத்தால் சேலத்தில்  உருவாக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பணியாற்றிய கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி எம்ஜிஆர் போன்றோர், தமிழக முதல்வர்களாகினர். வரலாறு, கலை, அரசியல், தொழில்வளம் என்று அனைத்திலும் தனித்துவம் பெற்ற சேலம் மாநகரை, மேலும் மெருகூட்டும் வகையில், ₹1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட்  திட்டப்பணிகள் நடந்து வருகிறது. ஜவுளிப்பூங்கா,  வெள்ளிக்கொலுசு பன்மாடி மையம், தலைவாசலில் ₹100 கோடியில்  கால்நடைப்பூங்கா,  ₹700 ேகாடியில் மேட்டூர் அணை உபரிநீர் பயன்பாட்டு திட்டம், தகவல்  தொழில்நுட்ப பூங்கா, பனமரத்துப்பட்டி ஏரி மறுசீரமைப்பு என்று ஏராளமான  திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு ெபறும்  போது, சேலம் புதுப்பொலிவு  பெற்ற மாவட்டமாக மாறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

சான்றாக நிற்கும் சுவடுகள் ஏராளம்
‘‘தமிழகத்தின்  நெற்களஞ்சியங்களுக்கு நீர்வார்க்கும் மேட்டூர் அணை, இயற்கை அழகால் இதயம்  வருடும் ஏற்காடு, இந்தியாவின் மிகப்பெரிய உருக்காலை, சிற்பக்கலையில் உச்சம்  தொடும் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், ஆடியில் 22நாட்கள் திருவிழா  நடக்கும் கோட்டை மாரியம்மன் கோயில், 150ஆண்டுகள் பழமையான லெக்லர் சர்ச்,  திப்புசுல்தான் வழிபட்ட ஜாமியா மஜீத், மகாத்மா காந்தி தங்கிய அஞ்சல்  அலுவலகம், நகரசபை சார்பில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட அரசு கல்லூரி,  ஆறகளூரில் சமணத்திற்கு வித்திட்ட புத்தர் கோயில் என்று சேலத்தின் பெரும்  சிறப்புகளுக்கு சான்றாக நிற்கும் சாட்சிய சுவடுகளும் ஏராளம்,’’ என்பது  மேலும் பெருமைக்குரியது.


Tags : Salem ,Municipality , Salem Municipality celebrates 157th birth anniversary today: Rejuvenates with multi-crore projects
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...