முருகனின் மூன்றாம் படைவீடான பழநிக்கு புதிய அடையாளம் தரும் ரோப்கார் திட்டங்கள்: கோயில் நகரம் சுற்றுலா நகராக உருமாற்றம்

பழநி: பழநிக்கு புதிய அடையாளம் தரும் வகையில் ரோப்கார் திட்டங்கள் அறிவிக்கப்படுவதால் கோயில் நகரம் சுற்றுலா நகரமாக உருமாற்றம் பெற்று வருகிறது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச் ரயிலும், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் முதன்முறையாக பழநி கோயிலில்தான் ரோப்கார் அமைக்கப்பட்டது. ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் 2004ல் துவங்கப்பட்ட தற்போதைய ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம் ஆகும். ஜிக்-பேக் முறையில் மேலே செல்லும் போது 14 பேரும், கீழே இறங்கும்போது 12 பேரும் மட்டுமே பயணிக்க முடியும். 1 மணி நேரத்தில் சுமார் 400 பேர் மட்டுமே தற்போதைய ரோப்காரில் பயணிக்க முடியும். இதனால் வார விடுமுறை தினம், கார்த்திகை, சஷ்டி மற்றும் விழா காலங்களில் ரோப்காரில் பயணிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. மழை மற்றும் காற்று காலங்களில் தற்போது உள்ள ரோப்காரை இயக்க முடியாது.

எனவே, பழநி கோயிலுக்கு கூடுதலாக 2வது ரோப்கார் அமைக்க வேண்டுமென கோயிலுக்கு பக்தர்கள் சுற்றுலாப்பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். நீண்டகால போராட்டத்திற்கு பின் சுமார் ரூ.72 கோடி மதிப்பீட்டில் 2வது ரோப்கார் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்துடன் இணைந்து ரோப்கார் அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட உள்ள ரோப்கார் மூலம் 1 மணி நேரத்தில் சுமார் 1200 பேர் பயணிக்க முடியும் என்று கூறுகின்றனர். மழை மற்றும் காற்று காலங்களிலும் தடையின்றி இயக்க முடியும்.

தற்போதைய ரோப்காரின் கிழக்கு பகுதியில் 2வது ரோப்கார் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் நிறைவடைந்தவுடன் பிரான்ஸ் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 2வது ரோப்காருக்கான இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, பின் டிரைலர் லாரிகள் மூலம் எடுத்து வந்து பொருத்தப்பட உள்ளது. 18 மாத காலத்திற்குள் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் ஒன்றிய அரசிடம் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்த பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சட்டப்பேரவையில் பழநி மலையில் இருந்து இடும்பன் மலைக்கு ரோப்கார் அமைக்கப்பட வேண்டும் என பழநி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விரைவில் பழநி மலையிலிருந்து இடும்பன் மலைக்கு ரோப்கார் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். பழநியில் அடுத்தடுத்து வரும் ரோப்கார் அறிவிப்புகளால் கோயில் நகரான பழநி சுற்றுலா நகராக உருபெற்றுள்ளது. இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கூறியதாவது, ‘‘பழநி கோயிலுக்கு 2வது ரோப்கார் அமைக்க கடந்த திமுக ஆட்சியிலேயே அறிவிப்பு செய்யப்பட்டது.

ஆட்சிமாற்றம் ஏற் பட்ட நிலையில் திமுக அறிவித்த திட்டம் என்பதால் அதிமுக அரசு உரிய அக்கறை காட்டவில்லை. தற்போது இத்திட்டம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர் முயற்சிகளின் பலனாக பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், முத்தாய்ப்பாக பழநி மலைக்கும்-இடும்பன் மலைக்கும் இடையேயும் ரோப்கார் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டங்களால் பழநிக்கு பக்தர்கள் வருகை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். இதனால் பழநியில் லாட்ஜ், உணவகம், பொருட்கள் விற்பனை என அனைத்து தரப்பு வணிகமும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: