×

பருவமழை காலங்களில் கேரளாவுக்கு வீணாக செல்லும் உபரி நீரை சேமிக்க ஆழியாற்றின் குறுக்கே தடுப்பணை வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி: பருவமழை காலங்களில், கேரளாவுக்கு வீணாக செல்லும் உபரி தண்ணீரை சேமிக்க, ஆழியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிஏபி., திட்டத்தில் முக்கிய நீராதாரமாக உள்ள பொள்ளாச்சியை அடுத்த 120அடி உயரம் கொண்ட ஆழியார் அணைக்கு சர்க்கார்பதி, அப்பர் ஆழியார், குரங்கு அருவி மற்றும் நீர்தேக்க பகுதி வழியாக தண்ணீர் வருகிறது. இந்த அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கும், வழியோர கிராம பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதுபோல், ஆண்டிற்கு ஏழேகால் டிஎம்சி தண்ணீர் ஆழியாரில் இருந்து, ஒப்பந்தத்தின் அடிப்படையில் கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும், தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழைப்பொழிவு இருக்கும் கால கட்டங்களில், ஆழியார் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து காணப்படும். அந்நேரத்தில் அணையில் தண்ணீர் முழுஅடியை எட்டும்போது, உபரிநீர் ஆற்றில் அதிகளவு திறக்கப்படுகிறது. ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் சுமார் 50கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள மணக்கடவு சிற்றணையில் தேங்கி, பின் கோபாலபுரம் அடுத்த தமிழக கேரள எல்லையில் உள்ள மூலத்தரா அணை வழியாக கேரளாவுக்கு செல்கிறது.

 ஆழியார் அணையிலிருந்து, கேரள மாநில பகுதிக்கு ஆண்டிற்கு ஏழே கால் டிஎம்சி தண்ணீர் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு முழுமையாக வழங்கப்படும் நிலையில், மழைக்காலங்களில் ஆற்றில் உபரியாக செல்லும் தண்ணீரும் கேரளாவுக்கு செல்லும். கேரளாவுக்கு கொடுக்கப்பட குறிப்பிட்ட  டிஎம்சி தண்ணீரை விடவும், உபரியாக அதிகளவு செல்லும் தண்ணீரை சேமிக்க முடியாமல் உள்ளது. இதனால், கோடை வறட்சி காலங்களில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்க பெறாத நிலை உண்டாகிறது.

இதுகுறித்து, விவசாயிகள் பலர் கூறுகையில், ‘பொள்ளாச்சியை அடுத்த, 120அடிகொண்ட ஆழியார் அணைக்கு, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில், அந்நேரத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். இதில் கனமழை இருக்கும்போது, அணைக்கு அதிகளவில் தண்ணீர் வரத்து இருப்பதுடன் முழு அடியை எட்டும். அணை நிரம்பியதும் அதனை உபரி நீராக ஆற்றில் திறக்கப்படுகிறது. ஆழியார் அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், குடிநீர்  தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டாலும். ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலத்துக்கு, இருமாநில அரசு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏழேகால் டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த தண்ணீர், மழை இல்லாத கால கட்டங்களிலேயே பெரும்பாலும் வழங்கப்படுகிறது.

மழைப்பொழிவு இருக்கும்போது, ஆழியாற்றில் உபரியாக செல்லும் பல டிஎம்சி தண்ணீர், மணக்கடவு சிற்றணையை தாண்டி பின் கேரளாவுக்கு செல்கிறது.
 இதனால் கேரளாவுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை காட்டிலும், அதிகளவு தண்ணீல் செல்வது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், ஆழியாற்றில் குறுக்கே ஆங்காங்கே தண்ணீரை சேமித்து வைக்க தடுப்பணை கட்டப்படாமல் இருப்பதுதான். ஆழியாற்றின் குறுக்கே தண்ணீர் அதிகளவு தேங்கும் இடங்களில் தடுப்பணை கட்டினால், கேரளாவுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுத்து, பொள்ளாச்சி சுற்றுவட்டார விவசாய பகுதிக்கு பகிர்ந்து கொடுக்க முடியும். மேலும், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற, இங்கிருந்து தண்ணீர் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.

ஆழியாற்றிலிலிருந்து உபரியாக செல்லும் தண்ணீர், வீணாக கேரள மாநில பகுதிக்கு செல்வதை தடுக்க, ஆற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டவேண்டும் என்று விவசாயிகள் தரப்பிலிருந்து பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த கால கட்டங்களனில் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. எனவே, மழை இல்லாத காலகட்டத்திலும், கோடை காலத்திலும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற ஏதுவாக, ஆழியாற்றில் குறிப்பிட்ட இடங்கள் தேர்வு செய்து, தடுப்பணையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், வரும் காலங்களில் இங்குள்ள விவசாய நிலத்தை காப்பாற்ற முடியும்’ என்றனர்.

உபரி நீரால் குளம், குட்டையை நிரப்ப வேண்டும்
மழை காலங்களில் விவசாய விளை நிலங்கள் ஓரளவு ஈரப்பதத்துடன் இருந்தாலும், அதில் பயிர் சாகுபடி மற்றும் காய்கறி சாகுபடி மேற்கொள்ளவும், தென்னை விவசாயத்துக்கும் போதுமான தண்ணீர் பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆழியார் அணையிலிருந்து உபரியாக வெளியேற்றப்படும் தண்ணீரை கிராமங்களில் உள்ள  குளம், குட்டைகளுக்கு திருப்பி விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Tags : Kerala , A barrage should be required across the canal to save surplus water that goes in vain to Kerala during monsoons: Farmers demand
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு