×

அதிமுக ஆட்சியில் தரமற்றதாக கட்டப்பட்ட தேனி புதிய பஸ் நிலையம் சீரமைக்கப்படும்: நகராட்சி நிர்வாகம் முடிவு

தேனி: அதிமுக ஆட்சியில் தேனி புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் தரமற்றதாக நடந்ததால் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே கட்டிடங்கள் பழுதாகி, ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிப்போயுள்ளது. இதையடுத்து, சீரமைப்பு பணி மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கலைஞர் கருணாநிதி கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது நிர்வாக வசதிக்காக மதுரை மாவட்டத்தில் இருந்து பிரித்து தேனி மாவட்டத்தை உருவாக்கினார். தேனி தலைநகரான கடந்த 25 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

மாவட்ட தலைநகரானதையடுத்து, தேனியில் பிரபல கல்வி நிறுவனங்கள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பல்நோக்கு மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள், வீட்டு உபயோக பொருள்களுக்கான கடைகள் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் பிரபல வர்த்தக நிறுவனங்கள் தேனிக்கு படையெடுத்தன. மாவட்ட தலைநகரான தேனிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் குடிபெயர்ந்துள்ளனர். இதேபோல வர்த்தகர்கள் ஏராளமானோர் நாள்தோறும் தேனியில் குடியேறுவது அதிகரித்துள்ளது. தேனியானது நிர்வாக தலைநகராகவும், மருத்துவ நகராகவும், கல்விநகராகவும், வர்த்தக மையமாகவும் உள்ளதால் தேனிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தேனியில் கம்பம்சாலை, பெரியகுளம் சாலை, மதுரை சாலை சந்திப்பில் காமராஜர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையமானது மிகச் சிறியதாக உள்ளதால், பஸ்கள் வந்து செல்லவும், பயணிகள் காத்திருக்கவும் முடியாத அளவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் காமராஜர் பஸ்நிலையத்தில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டன. எனவே, அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி நடந்தபோது, அப்போதைய துணை முதல்வரான மு.க.ஸ்டாலின் தேனியில் புதிய பஸ்நிலையம் அமைக்க தற்போது புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள வனத்துறைக்கு சொந்தமான 7.29 ஏக்கர் நிலைத்தை ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் கட்ட கடந்த 2011ம் ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில், நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக ஆட்சி வந்தது. இதனையடுத்து, புதிய பஸ்நிலையம் கட்டுமானப்பணிகள் அதிமுக ஆட்சி காலத்தில் நடந்தது. இந்த பஸ்நிலையத்தில் 60 கடைகள், ஆறு கட்டணம் மற்றும் பொதுக்கழிப்பறைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டன. கட்டுமானப்பணிகள் முடிந்து கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தேனியில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகரங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும், இப்புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்வதால், எப்போதும் இப்புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்த பணிகளில் கரப்சன், கலெக்சன், கமிஷன் நடப்பதாக அப்போதைய எதிர்கட்சியான திமுக தொடர்ந்து கூறி வந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக அமைவது போல தேனியில் புதியதாக கட்டப்பட்ட பஸ்நிலைய கட்டுமானப்பணிகள் முற்றிலுமாக தரமற்றதாக இருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பிரமாண்டமான வகையில் கட்டப்பட்டுள்ள இப்புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல்கள், கடைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்றவோ, பஸ் நிலைய பகுதிக்கான குடிநீர் தேவையை நிறைவேற்றும் குடிநீர் தரைமட்டத் தொட்டிக்கான சுற்றுச்சுவர் பாதுகாப்பு சுவருக்கான வசதிகள் செய்யப்படவில்லை.

இதனால் பஸ்நிலையத்தில் இருந்து கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் பஸ்நிலையத்தின் கிழக்கு பகுதியில் தனியார் நிலங்களில் தேங்கியது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, திட்டச்சாலையில் கழிவுநீரோடை கட்டப்பட்டது. இருந்தாலும், பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கழிவுநீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டப்பணிகளை செய்யாமல் திட்டச்சாலையில் உள்ள ஓடையில் கழிவுநீரை கலக்கச் செய்துள்ளனர். ரூ.12 கோடி மதிப்பீட்டில் தரமற்றதாக கட்டப்பட்ட புதிய பஸ்நிலையமானது தற்போது கான்கிரீட் ஓடுதளங்கள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இச்சாலையை சீரமைப்பதாக கூறி கான்கிரீட் ஓடுதளத்தை மீண்டும் சீரமைத்தனர்.

ஆனால், சீரமைத்த சாலையும் தரமற்றதாக போடப்பட்டதால் கான்கிரீட் சாலையும் சேதமடைந்துள்ளது. மேலும், புதிய பஸ்நிலைய கான்கிரீட் மேற்தளங்கள் தரமற்றதாக உள்ளதால் மழைகாலங்களில் மழைநீர் கான்கிரீட் மேற்தளங்களில் இருந்து வடிந்து, பயணிகள் மீதும், கடைக்காரர்கள் மீதும் விழுந்து சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பேருந்துகள் நிற்கும் இடத்தில் போடப்பட்ட பிளாஸ்டிக் மேற்கூரைகள் முழுமையாக வெயிலில் கருகி உதிர்ந்து விட்டது. புதிய பஸ் நிலையம் கட்டி சுமார் 10 ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் போல உருமாறியுள்ளது. எனவே அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிடாமல் நிதிமுறைகேடு செய்து தரமற்றதாக கட்டிடம் கட்டியது குறித்து விசாரணை நடத்துவதுடன், சேதமடைந்துள்ள புதிய பஸ்நிலைய மேற்கூரை கான்கிரீட்டுகளை சீரமைக்கவும், பேருந்து நிற்கும் பகுதியில் உள்ள மேற்கூரைகளை மாற்றவும், குண்டும், குழியுமாக உள்ள ஓடுதளங்களை சீரமைக்கவும் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து இப்பகுதியை சேர்ந்த ராசுதுரை என்பவர் கூறும்போது, பஸ் நிலையத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் தரமான பணிகள் மேற்கொள்ளாமல் நிதி முறைகேடு செய்ததன் விளைவாக புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் கூட முடிவடையாத நிலையில் பெரும் சேதமடைந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் புதிய பஸ்நிலையத்தினை ஆய்வு செய்து தரத்துடன் கூடியதாக மாற்றியமைக்க வேண்டும் என்றார். தேனி, அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் கூறும்போது, தேனி புதிய பஸ் நிலையத்தினை ஆய்வு செய்ததில் அத்தியாவசிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து முதற்கட்டமாக சுகாதாரமானதாக மாற்றும் பணியை துரிதப்படுத்தியுள்ளோம்.

பஸ்நிலையம் முழுமைக்கும் சுகாதாரமானதாக வண்ணம் தீட்டி சுவரொட்டி ஒட்டப்பட்ட பகுதிகளில் சுத்தம், சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு, விவசாய விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. பயணிகள் மற்றும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாகவும், கடைகளின் கான்கிரீட் மேற்தளங்களில் இருந்து மழைகாலங்களில் நீர்கசிந்து கடைகளுக்குள் வருவதாகவும் புகார் வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேற்தளங்களில் மழைநீர் கசியாமல் இருக்கவும், பஸ் நிலையத்தின் தெற்கு நுழைவு வாயிலில் சாலை சேதமடைந்திருப்பதையும், சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ள ஓடுதளத்தை கான்கிரீட் தளமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும், நிர்வாக அனுமதி பெற்று சீரமைப்பு பணிகள் துவங்கப்படும் என்றார்.

Tags : New Bus Station ,AIADMK , Theni New Bus Station built in substandard condition during AIADMK regime will be renovated: Municipal administration decision
× RELATED தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ்...