×

வடகிழக்கு பருவமழை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை; வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பருவமழை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (1.11.2022) முகாம் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு இயல்பாக 448 மி.மீ. மழை கிடைக்கப்பெறுகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இயல்பான மழை அளவை விட கூடுதலாக 35% முதல் 75% வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 29.10.2022 அன்று தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று (1.11.2022) திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (2.11.2022)  செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், 3.11.2022 அன்று  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், அதேபோன்று 4.11.2022 அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய அணைகளில் / நீர்த்தேக்கங்களில், 43 நீர்த்தேக்கங்கள் 75% முதல் 100 % வரையும், 17 நீர்த்தேக்கங்கள் 50% முதல் 75%  வரையும் நிரம்பியுள்ளன. எனவே இந்த நிலையில், மாநிலத்தில் அதிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கனமழை எச்சரிக்கை வரப்பற்றுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள்,

எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளுக்கு தாமதமின்றி மீட்புப் படையினை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கவும், பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவும், பழுதடைந்த / பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்படும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள் / டெங்கு போன்றவை பரவாமல் தடுத்திட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், மருத்துவ முகாம்கள் நடத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார். அத்துடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திட தேவையான நடவடிக்கைள் எடுத்திடவும்  மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அரசு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார். மழை காலத்தில் இடி, மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படுவதை குறைத்திட, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும், வெள்ளப்பாதிப்புள்ளாகும் பகுதிகளில் தேவையான நீர் இறைப்பான் இயந்திரங்களையும், மரம் அறுக்கும் கருவிகளையும், மணல் மூட்டைகளையும்  தயார் நிலையில் வைத்திட வேண்டும் என்றும், நிலச்சரிவு, மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து கவனம் செலுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் 1070 கட்டணமில்லாத் தொலைபேசி சேவையைப் பயன்படுத்திக்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். பொதுமக்கள் மழைக் காலங்களில் பல்வேறு தொற்றுநோய்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சிய குடிநீரையே குடித்திட வேண்டும் என்றும், மின்சார சாதனங்களை கவனமாக கையாள வேண்டும் என்றும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.   

இதுபோன்ற பெருமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலங்களில் இரவுபகல் பாராது பணியாற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்களுக்கும் முதலமைச்சர் தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, தொடர்ந்து இதே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வருவாய் நிருவாக ஆணையர் திரு.எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சந்தீப் சக்சேனா,

இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் திரு.குமார் ஜெயந்த், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் திரு.எஸ்.ஏ. ராமன், இ.ஆ.ப., சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,  நீலகிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,BC ,K. Stalin , Chief Minister M.K.Stal's consultation with ministers and officials regarding North East Monsoon
× RELATED இது வழக்கமான தேர்தல் அல்ல… ஜனநாயக அறப்போர்..! முதல்வர் மு.க.ஸ்டாலின்