தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்தது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற நிகழ்வு தமிழக கடற்கரை பகுதிகளில் நிலவுவதாக மழை பெய்கிறது.

17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர் உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம். நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலத்திலும் கனமழை வாய்ப்பு இருக்கிறது. நாமக்கல், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக செங்குன்றம் - 13, பெரம்பூர் - 12, சென்னையில் 10 செமீ மழை பதிவானது.

நாளை 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் நாளை 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் நாளை 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

அடுத்து வரும் 3 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 72 ஆண்டுகளில் 3வது முறை 8 செ.மீ. மழை:

சென்னையில் கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் 1ம் தேதி 8 செ.மீ. மழை பதிவானது இது மூன்றாவது முறை. கடந்த 30 ஆண்டுகளில் நவம்பர் 1ம் தேதி பெய்த அதிகபட்ச மழை இதுவாகும் என வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா, அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Related Stories: