×

2016-ல் கொல்கத்தா பாலம் இடிந்தபோது மம்தாவை தாக்கிய மோடி: நினைவு கூறும் எதிர்கட்சிகள்

கொல்கத்தா: குஜராத்தில் ஞாயிறன்று மோர்பி பாலம் விபத்து சம்பவத்தில் 134 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இதேபோன்று நிகழ்ந்த மேம்பால விபத்து சம்பவத்தையும் அப்போது பிரதமர் மோடி பேசியதையும் எதிர்கட்சிகள் தற்போது நினைவு கூர்ந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியும் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது  புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 80 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜியை குறிவைத்து பிரதமர் மோடி தாக்கி பேசி இருந்தார்.

பிரதமர் மோடி பேசுகையில்,‘‘இதுபோன்று பாலம் இடிந்து விழுந்தால் இந்த மக்கள் என்ன சொல்வார்கள்?  இது கடவுளின் செயல் என்று கூறுவார்கள். தீதியே(மம்தா பானர்ஜி) கடவுளின் செயல் இல்லை. இது மோசடியின் செயல். இது மோசடியின் விளைவு. தேர்தல் நேரத்தில் இதுபோன்று நடந்தது நிச்சயமாக கடவுளின் செயல் தான் மற்றும் நீங்கள் எப்படிப்பட்ட ஆட்சியை நடத்துகிறீர்கள் என்று மக்கள் தெரிந்து கொள்ளுவதற்காக நடந்த நிகழ்வு. இன்று பாலம் இடிந்து விழுந்தது நாளை மேற்குவங்கம் முடிக்கப்பட்டுவிடும் என்ற செய்தி கடவுளிடம் இருந்து மக்களுக்கு வந்துள்ளது”என்றார். தற்போது பாஜ ஆட்சி நடத்தி வரும் அதுவும் பிரதமர் மோடியின்  சொந்த மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டுள்ளதற்கு பாஜ அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

Tags : Modi ,Mamata ,Kolkata , Modi attacked Mamata when Kolkata bridge collapsed in 2016: Opposition remembers
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்