
சென்னை: மலையாள நடிகையான மஞ்சிமா மோகன் ‘அச்சம் என்பது மடமையடா’படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் உள்பட பல படங்களில் நடித்தார். ‘தேவராட்டம்’என்ற படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. அது கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளிவந்தது. இதனை இருவரும் ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.இந்த நிலையில் மஞ்சிமா மோகன், கவுதம் கார்த்திக்குடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்ைத இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டு காதலை உறுதி செய்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போனபோது நீ (கவுதம்) ஒரு காதல் தேவன் போல என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய். என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நானாக இருக்கவும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். நான் உன்னை நேசிப்பதற்கான காரணம், நீங்கள் என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதுதான்.நீங்கள் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்’’என்று எழுதியிருக்கிறார்.