×

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் விற்ற கோயம்பேடு மார்க்கெட் கடைக்கு அதிகாரிகள் சீல்; ரூ. 15 ஆயிரம் அபராதம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்ற கடைக்கு சீல் வைத்த சிம்டிஏ அதிகாரிகள், 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது என்று அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்வதுடன் அந்த கடைகளுக்கு சீல் வைக்கின்றனர். மேலும்,  3 மாதம் அக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

இதன் காரணமாக, பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை  தவிர்ப்பதற்காக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மஞ்சள் பை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் 5 ரூபாய் செலுத்தினால் மஞ்சள் பை வந்துவிடும். இருப்பினும் பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து,  சிம்டிஏ அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்வதாக அங்காடி நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, நேற்று காலை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில், அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்த கடையை கண்டறிந்து, அங்கிருந்து 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அக்கடைக்கு சீல் வைத்து, ரூ. 15,000 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் கூறுகையில், ‘‘கோயம்பேடு பூ, பழம், காய்கறி மற்றும் உணவு தானியம் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யக்கூடாது என பலமுறை விழிப்புணர்வு செய்தும், எச்சரித்தும் சில கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்தோம். அந்த கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து வருகிறோம். பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து சீல் வைக்கப்படும். கடையின் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து செய்யப்படும்’’ என்றார்.

Tags : Koyambedu , Officials seal Koyambedu market shop that sold banned plastic covers; Rs. 15 thousand fine
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...