அண்ணா நகர் மண்டலத்தில் வெள்ள தடுப்பு பணிகள் தீவிரம்; பொதுப்பணி துறை நடவடிக்கை

அண்ணாநகர்: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அண்ணாநகர் மண்டலத்தில் வெள்ள தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை பொதுப்பணி துறையினர் செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், அரும்பாக்கம், அமைந்தகரை, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, டி.பி.சத்திரம், புரசைவாக்கம், திருமங்கலம் மற்றும் முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில், மாநகராட்சி மற்றும் நெஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, அண்ணாநகர் மண்டல அதிகாரி முருகேசன் கூறுகையில் ‘‘எதிர்பாராத அளவிற்கு மழை பெய்து மழைநீர் தேங்கினால் அதனை அகற்றுவதற்கு உயர் திறன்கொண்ட மின் மோட்டார்கள் சுமார் 46 தயார் நிலையில் உள்ளன. அதுமட்டுமில்லாமல், பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். காற்றின் வேகத்தில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அதனை அறுத்து அப்புறப்படுத்துவதற்கு மரம் அறுக்கும் இயந்திரங்களும் சுமார் 30 தயார் நிலையில் இருக்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கினால் பொதுமக்கள் எங்களை தொடர்பு கொண்டு மீட்பு பணிகளுக்கு அணுகலாம். மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கான மீட்பு பணிகளில் அண்ணா நகர் மண்டல அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்’’என்றார். நெஞ்சாலைத்துறை அதிகாரி ரவி கூறுகையில், ‘‘மழைநீர் கால்வாய் பணிகள் அண்ணாநகர், அரும்பாக்கம், திருமங்கலம் பகுதிகளில் முடிந்துள்ளன. குறிப்பாக அசோக் நகர் பகுதிகளில் மழை பெய்தால் மழைநீர் தேங்கி அவ்வழியாக வாகனங்கள் செல்லமுடியவில்லை என்று வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். எனவே, மழைநீர் அந்த பகுதிகளில் தேங்கி நிற்காதபடி, மழைநீர் கால்வாய் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெறும் பகுதியில் தடுப்புகள் போடப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புகள் ஏதும் போடாமல் இருந்தால், அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக அதை சீர்படுத்திவிடுவோம்’’ என்றார்.

Related Stories: