×

திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் எச்சரிக்கையை மீறி கடலில் குளிப்பதை தடுக்க வேண்டும்; சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் குளிப்பதை  தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர் சுங்கச்சாவடி முதல் எண்ணூர்  நெட்டுக்குப்பம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி  உள்ளது. இந்த கடற்கரை பகுதி பெரும்பாலும் சாலையை ஒட்டி இருப்பதால்  பொதுமக்கள் குடும்பத்துடன் மாலை நேரங்களில் வந்து  பொழுதுபோக்குகின்றனர்.
மேலும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஆர்வத்தின்  காரணமாக கடலில் குளிக்கவும் செய்கின்றனர். இவ்வாறு குளிக்கும்போது சில  நேரங்களில் அலைகள் சீற்றத்தின் காரணமாகவும், கடல் அலையில் ஏற்படுகின்ற  சுழற்சி காரணமாகவும் குளிக்கின்றவர்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு விடுகின்றனர். இதில் நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள் பிழைத்துக் கொண்டாலும்  பெரும்பாலானவர்கள் கடலில் மூழ்கி இறந்து விடுகின்றனர். குறிப்பாக, எண்ணூர்  பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் ராமகிருஷ்ண நகர், திருவொற்றியூர்  காசி கோயில் குப்பம், பலகை தொட்டிக்குப்பம்,

திருச்சினாங்குப்பம்  போன்ற பல இடங்களில் குளித்த பலர் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கடலில் குளிக்க வேண்டாம் என்று காவல்துறையும் மீனவர்களும் பலமுறை  பொதுமக்களை எச்சரித்தாலும் ஒரு சிலர் எச்சரிக்கை மீறி கடலில்  குளிப்பதால் இது போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் கடல் சீற்றம் அதிக அளவில்  காணப்படும். இதனால் இந்த பகுதிகளில் கடலில் குளிப்பதை தடுக்க மாநகராட்சி  மற்றும் காவல்துறை கடுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் குளிக்க கூடாது என்று வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகை கிழிந்து  விட்டதால் கடற்கரையில் ஆபத்தான இடங்களில் காற்றில் சேதமாகாத அளவில்  எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvoteur ,Niloor , In Thiruvotiyur and Ennore areas, bathing in the sea should be prohibited despite the warning; Social activists insist
× RELATED படகு கவிழ்ந்து மீனவர் பலி: சடலத்துடன் மக்கள் மறியல்