தமிழ் வழியில் மருத்துவ படிப்பை படிப்பதற்காக புதிய மருத்துவக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை கருவி, கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறியும் கருவி, மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு பெண்களுக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை மையம் மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும் வலைத்தளத்தை மக்கள் நல்வாழ்வு துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

 

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் புற்றுநோய் மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பினால் வலியோடு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மாற்று சிகிச்சையாக ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் ரூ.40,000 வரை இந்த சிகிச்சைக்கு செலவு ஆகும். ஆனால் ஓமந்தூரார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கான மருத்துவ செலவு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ் வழியில் மருத்துவ கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் ஒரு கல்லூரி அமைத்திட வேண்டும். அதில் தமிழ் வழியில் மருத்துவ கல்லூரியாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் முதலில் மருத்துவக் கல்லூரி இல்லாத இடங்களில் மருத்துவ கல்லூரி தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அதன்படி தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை இடம் வைத்துள்ளோம். கோரிக்கை பரிசீலனையில் ஆறு மருத்துவகல்லூரி வந்த பிறகு சென்னையில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, தமிழ் வழி மருத்துவ கல்லூரி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* மருத்துவ கல்வி இயக்குனர் ஓய்வு பெறுகிறார்

மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தி மலர் புதிய மருத்துவ கல்வி இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார். கே.எம்.சி. மருத்துவமனைக்கு புதிய முதல்வர் நியமிக்கும் வரையில் சாந்தி மலரே முதல்வராக பணியை தொடர்வார் என கூறப்படுகிறது.

Related Stories: