×

தமிழர் தாயகம் உருவான நாள் எல்லை போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களுக்கு வீரவணக்கம்: வைகோ அறிக்கை

சென்னை: தமிழர் தாயகம் உருவான நாள் இன்று. எல்லை போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழகம் பல பகுதிகளை இழந்தது. தமிழர் தாயகத்தின் எல்லைகளை வரையறுக்க வடக்கு எல்லை போராட்டமும், தெற்கு எல்லை போராட்டமும் மிக வீரியமாக முன்னெடுக்கப்பட்டன. மார்ஷல் நேசமணி, எஸ்.சாம் நத்தானியல், பி.எஸ்.மணி உள்ளிட்ட தலைவர்கள் மக்களை திரட்டி, தெற்கு எல்லை போராட்டத்தை நடத்தினர். போராட்ட களத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு எல்லையை காப்பாற்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு அண்ணா ஆதரவு நல்கினார். திமுக தொண்டர்கள் எல்லை போராட்டங்களில் பங்கேற்று சிறை ஏகினர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு. தமிழர் தாயகம் உருவான நவம்பர் 1ல் எல்லை போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களுக்கும், உயிர் தியாகம் செய்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம். தமிழ் தேசிய இனம் போராடி பெற்ற உரிமைகளை பறித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று இந்துராஷ்டிரத்தை உருவாக்க கூப்பாடு போடும் இந்துத்துவ சனாதன சக்திகளை தமிழ் மண்ணிலிருந்து துடைத்து எறிய இந்நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil homeland , Tribute to the leaders who led the border struggle on the day Tamil homeland was created: VAICO report
× RELATED சொல்லிட்டாங்க…