×

ஓய்வுபெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

சென்னை: ஓய்வுபெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், 2021-22ம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப நிதி உதவியை 3 லட்சம் ரூபாயிலிருந்து ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது. பத்திரிகைத் துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கீடு, பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகையை 2 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார்.

அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2022-23ம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ம.சு.சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M. K. Stalin , Rs 10,000 per month pension for 41 retired journalists: Chief Minister MK Stalin orders
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...