திருவாரூர் அருகே கார் குளத்தில் கவிழ்ந்து விபத்து மாஜி ராணுவ வீரர், சிறுவன் உட்பட 4 பேர் பலி: சென்னையை சேர்ந்தவர்கள்

திருவாரூர்: திருவாரூர் அருகே கார் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாஜி ராணுவ வீரர் உட்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் கணேசன் (71). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், நேற்று சென்னையில் இருந்து காரில் தனது குடும்பத்தினருடன் திருவாரூர் அருகே ஓடாச்சேரிக்குவந்துள்ளார். பின்னர் அங்குள்ள குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலையில் காரில் சென்னைக்கு திரும்பினார். காரை கணேசன் மகன் சாமிநாதன் (37) என்பவர் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

திருவாரூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் விசலூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த குளம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் காருக்குள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் காருக்குள்ளே சிக்கினர். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திருவாரூர் தீயணைப்பு நிலையம் மற்றும் திருவாரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் குளத்திற்குள் இறங்கி காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் கணேசன், அவரது மனைவி பானுமதி (58), மகன் சாமிநாதன் (37), இவரது குழந்தை லட்சுமி நாராயணன் (1) ஆகிய 4பேரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதில் சாமிநாதன் மனைவி லட்சுமி (35) மட்டும் லேசான காயத்துடன் மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் லட்சுமியை, 108 ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இறந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: