×

மன்னிப்பு கேட்க மாட்டேன்: நிருபர்களுடன் அண்ணாமலை மோதல்

கோவை: பத்திரிகையாளர்களை அவமதித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியதால் அவருக்கும் நிருபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம்தேதி கார் காஸ் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் (29) பலியானார். இந்த கோயிலுக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார். அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு கந்தசஷ்டி பாடல் பாடி சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர், கோயிலைவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களை மத ரீதியாக சிலர் பிளவுபடுத்த முயற்சித்தாலும் அனைவரும் ஒன்றாகவே இருக்கின்றனர். மதத்தின் பெயரால் ஒற்றுமை உணர்வை சிலர், சீர்குலைக்க முயல்கின்றனர். பாஜ எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை. வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. இன்றுமுதல் அடுத்தக்கட்டத்திற்கு கோவை செல்ல வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் என்பதை இஸ்லாம் மத குருமார்களே எதிர்க்கின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.  
அண்ணாமலையிடம், பத்திரிகையாளர்களை குரங்கு என விமர்சித்தது குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பியபோது, ‘’நான் யாரையும் குரங்கு என சொல்லவில்லை. குரங்கு மாதிரி என்றுதான் சொன்னேன். நான் அவ்வாறு கூறியதற்கு யாரிடமும்  மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை. நான் சரியாகத்தான் செயல்படுகிறேன். நீங்கள் வேண்டுமானால் எனது பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து விட்டு செல்லுங்கள் ‘’ என்றார்.

அப்போது, பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பரபரப்பான சூழல் நிலவியது. பேட்டியின்போது, அண்ணாமலை, தனது சட்டைப்பையில் இருந்து ஒரு கோலி குண்டு மற்றும் சில ஆணிகளை காண்பித்து, நான் கோயிலுக்கு வரும்போது கார் வெடித்த இடத்தில் கிடைத்ததாக கூறி தன்னிடம் கொடுக்கப்பட்டதாகா தெரிவித்தார். தனிப்படை போலீசாரின் விசாரணை முடிந்து, தற்போது என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் வேளையில், தடயங்களை அண்ணாமலை சட்டைப்பையில் இருந்து எடுத்து  காண்பித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Annamalai , Will not apologise: Annamalai clash with reporters
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...