×

வன மேம்பாட்டுக்கு ரூ. 244.59 கோடி மதிப்பில் பணிகள்: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அலுவலர்களுடன் ஆய்வு

சென்னை: தமிழ்நாடு முழுவதும்  பல்வேறு திட்டங்களில் ரூபாய். 244.59 கோடி மதிப்பிலான பணிகளின் முன்னேற்றம் குறித்து  வனத்துறை கூட்ட அரங்கில் இன்று  வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
                             
தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வனங்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றார். நடப்பாண்டு வனத்துறை மேம்பாட்டு பணிகளுக்காக மூலதனம் மற்றும் வருவாய் செலவின நிதி ஒதுக்கீடு மூலம் ரூபாய். 244.59 கோடியும், அரசு நிதி ஒதுக்கீடு ரூபாய். 25 கோடியும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மேம்பாட்டிற்கு ரூபாய். 26.58கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. தீ தடுப்பு பணிகளுக்கு ரூபாய். 4.18 கோடியும், வன விலங்குகள் பாதிப்பு நிவாரண பணிகளுக்கு ரூபாய். 340.43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நபார்டு திட்டத்தின் மூலம் காடுகள் மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூபாய். 143.69 கோடியும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை குறிப்பிட்ட  கால கெடுவுக்குள் மேற்கொள்ளவும் சரியாக திட்டமிட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுரைகள் வழங்கினார்.
          
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) சையத் முஜம்மில் அப்பாஸ், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் (கேம்பா) சுப்ரத் மஹபத்ரா, கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர்கள் மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து தெரிவித்தனர்.

Tags : Ministry of Foreign Affairs ,Ramachandran , For forest development Rs. 244.59 crore works: Forest Minister Ramachandran inspects with officials
× RELATED மார்ச் 2,3,4-ல் தமிழ்நாடு முழுவதும்...