×

டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்காவுடன் தோல்வி ஏன்?; பீல்டிங்கில் சொதப்பியதுதான் முக்கிய காரணம்: கேப்டன் ரோகித் பேட்டி

பெர்த்: டி 20 உலக கோப்பை தொடர் சூப்பர் 12 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித், கே.எல்.ராகுல் லுங்கி இங்கிடி ஓவரில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து விராட் கோஹ்லி, தீபக் ஹீடாவும் வெளியேறினர். ஹர்திக் பாண்டியா 2 ரன், தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் 6 ரன்களை எடுத்து சொதப்பினர். சூர்யகுமார் யாதவ் மட்டும் ஒருமுனையில் சிறப்பாக ஆடி 40 பந்துகளில் 68 ரன் குவித்து அவுட்டானார். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழந்து 133 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் குவின்டன் டிகாக் - டெம்பா பவுமா ஜோடியை தனது முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப்சிங் பிரித்தார். தொடர்ந்து ரோசோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். பின்னர் பவுமாவும் ஆட்டமிழந்தார். 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்க அணியை ஏய்டன் மார்க்ரம் (52ரன்), டேவிட் மில்லர் ஜோடி மீட்டது. இறுதிவரை அவுட் ஆகாமல் மில்லர் 59 ரன் எடுத்து அணியை வெற்றிபெற செய்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகளையும், சமி, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முதல் தோல்வி இது ஆகும்.

இந்திய அணி தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று முன்பே எதிர்பார்த்தோம். இரவு நேரத்தில் போட்டி தொடங்குவதால் ஆட்டத்தின் பிற்பகுதியில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்று எங்களுக்கு தெரியும்.அதனால் தான் 134 என்ற இலக்கை கூட தென்னாப்பிரிக்க வீரர்கள் எட்ட தடுமாறினர். ஆனால் நாங்கள் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன் அடித்திருக்க வேண்டும். நாங்கள் கடுமையாக போராடினோம்.
ஆனால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். பந்துவீசியபோது பீல்டிங்கில் படுமோசமாக  சொதப்பினோம். இதுவும் தோல்விக்கு முக்கிய காரணம். அஸ்வினுக்கு முன்பே 4  ஓவர்களையும் கொடுத்திருந்தால், தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி எளிதாக  மாறிவிடும் எனக் கருதிதான், அஸ்வினின் கடைசி ஓவரை, முன்பே வீசவிடவில்லை.

அஸ்வினுக்கு  கடைசி ஓவரில்தான், அவருடைய 4வது ஓவரை கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.  இருப்பினும், முன்கூட்டியே முடித்துவிடுவது நல்லது என நினைத்தேன். மேலும்,  கடைசி இரண்டு ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வீசினால், வென்றுவிடலாம்  எனவும் கருதினோம். மில்லர் சிறப்பாக விளையாடியதால்தான், தோற்றோம்.  அடுத்தடுத்த போட்டிகளின்போது, மீண்டும் இதே தவறை தொடராமல் இருக்க கடுமையாக  பயிற்சி செய்வோம்’’ என்றார்.

தினேஷ்கார்த்திக் காயம்; ரிஷப் பன்ட்க்கு வாய்ப்பு: இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிற்கு முதுகு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பெவிலியன் திரும்பிய நிலையில், ரிஷப் பன்ட் மாற்றாக களத்திற்குள் வந்தார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக்கை பெவிலியனில் கூட பார்க்க முடியவில்லை. இதுகுறித்து, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘போட்டி முடிந்தப் பிறகு நான் தினேஷ் கார்த்திக்கை பார்க்கவில்லை. ஹோட்டலில்தான் பார்த்து பேச வேண்டும். தினேஷ் கார்த்திக்கிற்கு முதுகு பகுதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற தகவல் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளது’’ என்றார். தினேஷ் கார்த்திக் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காயமும் ஏற்பட்டுள்ளதால், வரும் 2ம்தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இவருக்கு பதில், ரிஷப் பன்ட் களமிறங்கத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : T20 World Cup ,South Africa ,Rohit , Why T20 World Cup failure with South Africa?; Lack of fielding is the main reason: Captain Rohit interview
× RELATED ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை டிராபி டூர் நியூயார்க்கில் தொடக்கம்!!