தீபாவளி பண்டிகை விற்பனை ரூ.4,500 கோடி; சிவகாசியில் முன்னதாகவே துவங்கிய பட்டாசு உற்பத்தி: உற்சாகத்தில் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள்

சிவகாசி: சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து பட்டாசுகளும் ரூ.4,500 கோடிவரை விற்று தீர்ந்ததால், ஆலைகளில் அடுத்த ஆண்டுக்கான உற்பத்தி பணிகள் முன்னதாகவே துவங்கபட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அர்ஜுன் கோபால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த அக். 23, 2018ல் உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு அளித்தது. அதில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இந்தியா முழுவதிலும் தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், தீபாவளி பண்டிகைக்கு  இரண்டு மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும், கிரீன் பட்டாசு உற்பத்தி செய்வதுடன், பேரியம் நைட்ரேட் கெமிக்கல் பயன்படுத்தக்கூடாது, சரவெடிகளை உற்பத்தி செய்யக்கூடாது என்பன போன்ற பல்வேறு  நிபந்தனைகளை விதித்தது.

 

இதனால் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசு உற்பத்தி பணியில்  40 சதவீதம்  பாதிப்படைந்தது. நீதிமன்ற தீர்ப்பால்  பட்டாசு ஆலைகளில் அனைத்து வகை பட்டாசுகளும்  உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து    பேரியம் நைட்ரேட் கெமிக்கல் இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய முடியாது என கூறி   சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர்   போராட்டம் நடத்தினர். இதனிடையே  உச்ச நீதிமன்றத்தில் பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சிரமப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தாமல் பசுமை பட்டாசுகளுக்கான பார்முலாவை தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது என உச்ச நீதிமனத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் குறைவான அளவில் பேரியம் நைட்ரேட் கெமிக்கல் கலந்து தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை அறிமுகம் செய்தனர். இதைத்தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் 60 சதவீத உற்பத்தி பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் சிவகாசி பட்டாசுகளுக்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தட்டுப்பாடு இருந்தது. பெரிய ஆலைகளில் உற்பத்தி பணிகள் சரிவர நடைபெறாததால், உற்பத்தி குறைந்து பட்டாசு தேவை அதிகரித்தது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளுக்கு  தட்டுப்பாடு அதிகரித்தது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது இந்தியா முழுவதிலும் ரூ.4.500 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையானது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பட்டாசுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தது. இதனால் ஆடுத்த ஆண்டுக்கான ஆர்டர்களை வெளி மாநில வியாபாரிகள் உற்பத்தியாளர்களிடம் முன்னதாகவே கொடுத்துள்ளனர். வழக்கமாக சிவகாசி பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகை முடிந்து 15 முதல் 30 நாட்களுக்கு பின்பு தான் உற்பத்தி பணிகள் தொங்கும். ஆனால் இந்த ஆண்டு அனைத்து பட்டாசுகளும் விற்று தீர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் ஆலைகளில் சிறப்பு புஜை நடத்தி முன்னதாகவே உற்பத்தி பணிகளை துவக்கி விட்டனர்.

இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுைகயில், இந்தியா முழுவதிலும் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இதனால் வட மாநில வியாபாரிகள் இப்போதே அடுத்த தீபாவளி மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான  ஆர்டர்களை கொடுக்க துவங்கியுள்ளனர். எனவே பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகை முடிந்த இரண்டு நாட்களில் உற்பத்தி பணியை துவங்கி விட்டோம் என்றார்.

Related Stories: