ராமஜெயம் கொலை வழக்கு சூடுபிடிக்கிறது; 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு விவகாரத்தில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29ம்தேதி காலை நடை பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் உள்ள காவிரி கரையோரம் கை, கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். சிபிசிஐடி விசாரணையில் சரிவர துப்பு கிடைக்காததால் ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுகுழு அமைக்கப்பட்டு  தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைக்கு வெளியில் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் 12பேர் அடங்கிய இறுதிபட்டியல் தயார் செய்யப்பட்டது.

இவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் திருச்சி வந்தார். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில்,  ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் நாளை 12 பேரும் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: