கோவை வெடிவிபத்து சம்பவத்தில் கோமாளித்தனமாக அரசியல் செய்யும் அண்ணாமலை; திமுக செய்தி தொடர்பு பிரிவு இணை செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: கோவை வெடிவிபத்து சம்பவத்தில் கோமாளித்தனமாக அண்ணாமலை அரசியல் செய்வதாக திமுக செய்தி தொடர்பு பிரிவு இணை செயலாளர் ராஜீவ்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை என்பது காவல்துறையை கொச்சைப்படுத்தும் விதமாக இருந்தது. கோவை கார் வெடிப்பு விபத்து நடந்தவுடன் முதலில் சம்பவம் இடத்துக்கு சென்ற காவல்துறையினரை ஜாதி, மதம் என பிரித்து உளறி வருகிறார். ஒரு இக்கட்டான சம்பவம் நிகழும்போது ஒரு அரசியல் கட்சியாக அந்த மக்களிடம் சென்று விளக்கவேண்டியதும், சமூக நல்லிக்கணக்கமாக மக்களிடம் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மாறாக கோமாளி தனமாக கடையடைப்பு (பந்த்) நடத்துகிறோம் என்கிறார். சென்னைக்கு அடுத்து வளர்ந்து வரும் தொழில்நகராமான கோவையில் தொழில் செய்யவேண்டாம் என கூறுவது என்பது அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரின் மிகவும் வெட்ககேடான செயல்.

எந்த ஒரு வழக்காக இருந்தாலும் காவல்துறையினரின் நடவடிக்கையிலோ, ஒன்றிய அரசின் நடவடிக்கையிலோ, நீதிமன்ற நடவடிக்கையிலோ ஒரு அரசியல் கட்சி தலையிடமுடியாது. அதன்படி முதல்வர் ஏன் இது குறித்து பேசவில்லை என கேட்கிறார். ஒன்றிய அரசின் என்.ஐ.ஏ-விடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் பேசவில்லை என்கிறார். ஆனால் சம்பவம் நடந்த உடனே முதல்வர் உத்தரவிட்டு காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி கிடைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு சம்பவத்தின் அசாதாரண சூழ்நிலையை வைத்துக்கொண்டு பிழைப்புக்காக அண்ணாமலை அரசியல் நடத்துகிறார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முபின் என்பவர் பயங்கரவாதி, அவரை மாநில காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென ஒன்றிய அரசு கூறியதாக சொல்கிறார். ஆனால் இதுவரை தமிழக அரசுக்கு அப்படி ஒரு கடிதம் வரவில்லை. மேலும், வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அறிக்கையாக அண்ணாமலை கொடுத்து வருகிறார்.

நாட்டின் இறையாண்மையை கருதி ஒரு அரசியல் கட்சியாக இந்த விவகாரத்தில் பேசமுடியாமல் இதனை திமுக கடந்து செல்கிறது. ஆனால், எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லாமல் பெங்களூருவிலிருந்து கோவைக்கு இடம்பெயர்ந்து வரும் தொழில்நிறுவனங்களை தடுக்கவே அண்ணாமலை தவறான தகவல்களை பரப்புகிறார். கோவையில் தொழிலை முடக்கும் விதமாக அசாதாரணமான சூழல் நிலவுவதாக அவர் கூறிவருகிறார். யாரிடம் பணம் வாங்கி கொண்டு இவர் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் பதட்டத்தை தணிக்க வேண்டும் என திமுக அரசு விரும்புகிறது. ஆனால் பதட்டத்தை உருவாக்க வேண்டுமென அண்ணாமலை செயல்படுகிறார். முன்னாள் முப்படை தளபதி இறந்தபோது அண்ணாமலை வாய்திறக்கவில்லை.

ஆனால் முதல்வர் நேரடியாக சென்று அவருக்கு அஞ்சலியை செலுத்தினார். உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அசம்பாவிதம் நடக்கும் என எச்சரித்து அறிக்கை அனுப்பியதாக கூறுவது தவறு. அது போன்ற அறிக்கை அரசுக்கு வரவில்லை. உண்மையாகவே, அண்ணாமலையிடம் தகவல் இருந்தால் அதனை ஆலோசனையாக கூறும்பட்சத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தற்போதுவரை கோவையில் நடந்தது சிலிண்டர் வெடிப்பு மட்டுமே. முபினுக்கு கெட்ட எண்ணம் இருக்கிறதா. அவர் பயங்கரவாதியா என என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவரும். அதற்கான விசாரணை நடைபெற்றுவருகிறது.

Related Stories: