பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஏன் இந்த தாமதம்? பாஜ.வுக்கு கெஜ்ரிவால் கேள்வி

புதுடெல்லி:  ‘வரும் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதை பாஜ தாமதப்படுத்துகிறதா?’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத்தில்  பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக இம்மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜ அரசு முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்களை கவரவே, இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய அரசியல் சட்டம் 44வது விதியின் கீழ்  பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது ஒன்றிய அரசின் பொறுப்பு.

அனைத்து சமுதாயத்தினரின் கருத்துகளை கேட்ட பிறகு இதை செய்ய வேண்டும். இதற்காக, பாஜ இதுவரை என்ன செய்துள்ளது? இதில் தவறான எண்ணம் அவர்களுக்கு உள்ளது. உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, இது போன்ற குழுவை அமைத்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அந்த குழு காணாமல் போய் விட்டது. தற்போது  குஜராத்திலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின் இந்த குழுவும் காணாமல் போய் விடும். பொது சிவில் சட்டத்தை  அமல்படுத்த விரும்பினால், நாடு முழுவதும் அதை அமல்படுத்த வேண்டும். 2024  மக்களவை தேர்தலுக்காக பாஜ இதை  தாமதப்படுத்துகிறதா:?,’ என கேள்வி எழுப்பினார்.

Related Stories: