உக்ரைனுடன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ரத்து, உலகளவில் பட்டினிச் சாவு, உணவு பற்றாக்குறை ஆபத்து: ரஷ்யாவுக்கு பல நாடுகள் கண்டனம்

கீவ்: உக்ரைன் உடனான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை ரஷ்யா ரத்து செய்துள்ளதால் உலகளவில் மீண்டும் தானியப் பற்றாக்குறை, பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் உள்பட உலக தானிய உற்பத்தியில் உக்ரைன் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்த போரினால் உலக நாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதியாவது குறைந்து எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தானியப் பற்றாக்குறையினால் பட்டினி சாவு ஏற்படும் நிலை உருவானது. இதனைக் கருத்தில் கொண்டு ஐநா, துருக்கி எடுத்த நடவடிக்கைகளின் பலனாக இரு நாடுகளும் கடந்த ஜூலை மாதம் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம், பல லட்சம் டன் தானியங்கள் கருங்கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டது. இதனால், விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த ஒப்பந்தம் அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிய உள்ளது. இதனையொட்டி, ஐநா பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் இரு நாடுகளும் உணவு தானிய ஏற்றுமதி ஒப்பந்ததை புதுப்பித்து கொள்ள வலியுறுத்தினார். இந்நிலையில், கருங்கடலில் கிரீமியா கடலோரப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய கடற்படை கப்பல் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதால், ரஷ்யா ஆத்திரம் அடைந்துள்ளது. இதனால், அந்த நாட்டுடனான உணவு தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய கப்பல் மீது தாக்குதல் நடத்தவில்லை என மறுத்துள்ள உக்ரைன், ‘உணவு தானிய பற்றாக்குறை பிரச்னையை உருவாக்க ரஷ்யா திட்டமிடுகிறது,’ என குற்றம் சாட்டியுள்ளது. கருங்கடல் வழியாக உலக நாடுகளுக்கு உணவு தானியம் ஏற்றுமதியாவது தடைபட்டால் உலகளவில் மீண்டும் தானிய பற்றாக்குறை ஏற்படும், அதனால் பட்டினி சாவு, விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ரஷ்யாவின் ஒப்பந்த ரத்து அறிவிப்புக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Related Stories: