×

மார்க்ரம், மில்லர் அரை சதம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி: சூரியகுமார் அதிரடி வீண்

பெர்த்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய அணியுடன் மோதிய தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. பெர்த் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி 8.3 ஓவரில் 49 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. கேப்டன் ரோகித் 15, கே.எல்.ராகுல் 9, கோஹ்லி 12, தீபக் ஹூடா 0, ஹர்திக் பாண்டியா 2 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். இந்த நிலையில், சூரியகுமார் - கார்த்திக் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தனர். வழக்கத்துக்கு மாறாக கட்டை போட்ட கார்த்திக் 15 பந்தில் 6 ரன் மட்டுமே எடுத்து பார்னெல் பந்துவீச்சில் ரூஸோ வசம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடி அசத்திய சூரியகுமார் 30 பந்தில் அரை சதம் அடித்தார். அஷ்வின் 7 ரன்னில் வெளியேற, சூரியகுமார் 68 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பார்னெல் பந்துவீச்சில் மக்ராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷமி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட்டானார். இந்தியா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. புவனேஷ்வர் 4, அர்ஷ்தீப் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் லுங்கி என்ஜிடி 4 ஓவரில் 29 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார். வேய்ன் பார்னெல் 3, அன்ரிச் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, அர்ஷ்தீப் வீசிய 2வது ஓவரில் டி காக் (1), ரைலீ ரூஸோ (0) விக்கெட்டை பறிகொடுக்க 3 ரன்னுக்கு 2 ரன் என அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. கேப்டன் பவுமா 10 ரன் எடுத்து ஷமி வேகத்தில் வெளியேற, இந்திய வீரர்கள் உற்சாகமடைந்தனர். எனினும், 4வது விக்கெட்டுக்கு மார்க்ரம் - மில்லர் ஜோடி பொறுப்புடன் விளையாடி 76 ரன் சேர்க்க, தென் ஆப்ரிக்கா வெற்றியை நெருங்கியது. மார்க்ரம் 52 ரன் (41 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹர்திக் வேகத்தில் சூரியகுமாரிடம் பிடிபட்டார். கடைசி 3 ஓவரில் 25 ரன் தேவைப்பட்ட நிலையில், அஷ்வின் வீசிய 18வது ஓவரின் முதல் 2 பந்துகளையும் மில்லர் சிக்சருக்குத் தூக்கியது இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தது. அதே ஓவரில் ஸ்டப்ஸ் (6 ரன்) ஆட்டமிழந்தார். கடைசி 12 பந்தில் 12 ரன் தேவை என்ற நிலையில், 19வது ஓவரில் ஷமி 6 ரன் விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 6 ரன் தேவைப்பட்டது. புவனேஷ்வர் வீசிய அந்த ஓவரின் 3வது மற்றும் 4வது பந்துகளை மில்லர் பவுண்டரிக்கு விரட்ட, தென் ஆப்ரிக்கா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வென்றது. மில்லர் 59 ரன் (46 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), பார்னெல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். என்ஜிடி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது பிரிவில் தென் ஆப்ரிக்கா 3 போட்டியில் 5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்தியா (4), வங்கதேசம் (4), ஜிம்பாப்வே (3), பாகிஸ்தான் (2), நெதர்லாந்து (0) அடுத்த இடங்களில் உள்ளன.



Tags : Markram ,Miller ,South Africa ,Suryakumar , Markram, Miller half-centuries, South Africa won by 5 wickets: Suryakumar's action was in vain
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...