×

கடைசி பந்தில் வங்கதேசம் மீண்டும் மீண்டும் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம்

பிரிஸ்பேன்: ஜிம்பாப்வே அணியுடனான சூப்பர் 12 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், வங்கதேச அணி 2 முறை வீசப்பட்ட பரபரப்பான கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. காபா மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் குவித்தது. தொடக்க வீரர் நஜ்முல் ஷான்டோ 71 ரன் (55 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), லிட்டன் தாஸ் 14, கேப்டன் ஷாகிப் ஹசன் 23, அபிப் உசேன் 29 ரன் எடுத்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் ரிச்சர்ட், முஸரபானி தலா 2, சிக்கந்தர், வில்லியம்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 5.5 ஓவரில் 35 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் ஷான் வில்லியம்ஸ் - ரெஜிஸ் சகாப்வா இணைந்து 5வது விக்கெட்டுக்கு 34 ரன் சேர்த்தனர். சகாப்வா 15 ரன்னில் வெளியேற, அடுத்து வில்லியம்ஸ் - ரியான் பர்ல் ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 63 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஜிம்பாப்வே வெற்றியை நெருங்கிய நிலையில், வில்லியம்ஸ் 64 ரன் எடுத்து (42 பந்து, 8 பவுண்டரி) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். மொசாடெக் உசேன் வீசிய கடைசி ஓவரில், ஜிம்பாப்வே வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது.

அந்த ஓவரின் 2வது பந்தில் பிராட் எவன்ஸ் (2 ரன்), 5வது பந்தில் ரிச்சர்ட் (6 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில், அதை எதிர்கொண்ட முஸரபானி ஓங்கி சுழற்றிய மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. வங்கதேச வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இறங்க, ஜிம்பாப்வே வீரர்களும் பெவிலியன் நோக்கி நடைபோட்டனர். ஆனால், கீப்பர் நூருல் ஸ்டம்புகளுக்கு முன்பாக கைகளை வைத்து பந்தை பிடித்தது ரீப்ளேயில் தெரியவந்ததை அடுத்து, அது நோ பால் என அறிவிக்கப்பட்டதுடன் ஃபிரீ ஹிட்டும் வழங்கப்பட்டது. இதனால் மீண்டும் கடைசி பந்தில் 4 ரன் எடுத்தால் வெற்றி, 3 ரன் எடுத்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்ட வாய்ப்பாக கிடைத்த அந்த பந்தையும் அடிக்க முடியாமல் முஸரபானி வீணடிக்க, வங்கதேசம் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. ஜிம்பாப்வே 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. பர்ல் (27 ரன்), முஸரபானி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் டஸ்கின் அகமது 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 19 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொசாடெக், முஸ்டாபிசுர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


Tags : Bangladesh ,Zimbabwe , Bangladesh win again in the last ball: Zimbabwe disappoint
× RELATED சில்லி பாயின்ட்…