பின் சக்கர பிரேக்கில் குறைபாடு 9,925 கார்களை திரும்ப பெற மாருதி சுசுகி நிறுவனம் முடிவு: ‘வாடிக்கையாளர் பாதுகாப்பே முக்கியம்’

புதுடெல்லி: பின் சக்கர பிரேக்கில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக,  10 ஆயிரம் கார்களை மாருதி சுசுகி நிறுவனம் திரும்பப் பெறுகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளான வேகன் ஆர், செலிரியோ மற்றும் இக்னிஸ் ஆகிய கார்கள், சந்தையில் அதிகளவில் விற்பனையாகின்றன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 3ம் தேதிக்கும் செப்டம்பர் 1ம் தேதிக்கும் இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வகை கார்களின் பின் பிரேக்கில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளன. குறிப்பாக, பிரேக்கில் விரிசல் ஏற்பட்டு, வினோதமான சத்தம் எழுகிறது.

இது, நீண்ட  தூர பயணத்தின் போது பின் சக்கர பிரேக்கை பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. எனவே, இந்த குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட, விற்கப்பட்ட 9, 925 கார்களை திரும்பப் பெற சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சந்தேகத்துக்குரிய இந்த வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சேதமான பிரேக் பாகங்கள் புதிதாக மாற்றி அளிக்கப்படும். இந்த கார்களை வாங்கிய வாடிக்கயைாளர்களை மாருதி சுசுகி நிறுவனம் தொடர்பு கொண்டு வருகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: