×

தென் கொரியாவில் நரகமாக மாறிய ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் பலி, குறுகிய கடை வீதியில் 1 லட்சம் பேர் கூடியதால் விபரீதம்; காயமடைந்த 100 இளைஞர்களில் 24 பேர் கவலைக்கிடம்

சியோல்: தென் கொரியாவில் நடந்த ‘ஹாலோவீன்’ திருவிழா நரகமாக மாறியது. குறுகிய கடை வீதிக்குள் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் பலியாகினர். காயமடைந்த 100க்கும் மேற்பட்டோரில் 24 பேரின் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தென் கொரியா தலைநகர் சியோலில் ‘ஹாலோவீன்’ திருவிழா கடந்த சில நாட்களாக களைகட்டி இருந்தது. அமெரிக்காவில் கொண்டாடப்படும் இந்த பாரம்பரிய திருவிழா, அமெரிக்க கலாசாரத்தின் மீது மோகம் கொண்ட தென் கொரிய இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இது தென் கொரியாவின் பாரம்பரிய திருவிழா இல்லை என்றாலும், கடந்த சில ஆண்டாக ஹாலோவீன் திருவிழாவை கொண்டாடுவதில் தென் கொரிய இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கொரோனாவால் கடந்த 2 ஆண்டாக ஹாலோவீன் திருவிழாவை கொண்டாட முடியாத நிலையில், இந்த ஆண்டு இட்டாவோன் பகுதியில் திருவிழா களை கட்டியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத்தான் தென் கொரிய அரசு பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், மாஸ்க் கூட அணியாமல் தென் கொரிய இளைஞர்களும், இளம்பெண்களும் இட்டாவோன் பகுதியில் குவிந்தனர். இங்கு குறுகிய சாலைகளில் ஏராளமான உணவகங்கள், மதுபான பார்கள், துணிக்டைகள் திருவிழாவுக்காக குவிந்துள்ளன. நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. பேய் போன்ற முகமூடிகள் அணிந்தும், முகத்தில் கோரமான பெயிண்ட்டிங்கை பூசிக் கொண்டும் பலர் குவிந்தனர். இட்டாவோனின் குறுகிய சாலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அப்போது திடீரென கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேற முயன்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் பலர் சிக்கினர். ஓட முடியாமல் தடுமாறி கீழே விழுந்த பலரையும் பின்னால் வந்தவர்கள் ஏறி மிதித்தபடி முன்னேறிச் சென்றனர். இதனால் அப்பகுதியே ரணகளமாக மாறியது. மிதிபட்டவர்கள் பலர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சிலர் மூச்சுத்திணறி மாரடைப்பு ஏற்பட்டு பலியாகினர். மகிழ்ச்சியாக திருவிழாவை கொண்டாட வந்தவர்களுக்கு இட்டாவோன் பகுதி நரகமாக மாறியது. தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால் மிகக் குறுகிய கடைத் தெரு என்பதால் மீட்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. சில மணி நேரத்திற்குப் பிறகே கூட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 153 பேர் பலியாகினர். மீட்கப்பட்ட சடலங்களை போலீசார் சாலையிலேயே கிடத்தி வைத்ததைப் பார்த்து, அவர்களது நண்பர்கள், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 24 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பல எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இறந்தவர்கள் பெரும்பாலானோர் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த சம்பவத்தில் இறந்தவர்களையும், காணாமல் போனவர்களையும் தேடி அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் கண்ணீருடன் குவிந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Halloween ,South Korea , In South Korea, the Halloween festival turned into hell, 153 people died in the crowd, and 1 lakh people gathered in the narrow shopping street. Out of 100 injured youth, 24 are critical
× RELATED கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை