×

திருச்செந்தூரில் அரோகரா கோஷம் முழங்க சூரனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்; 2 ஆண்டுக்கு பிறகு கடற்கரையில் லட்சக்கணக்கானோர் தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகரமாக சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. கடற்கரையில் அரோகரா கோஷம் முழங்க சூரனை, ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகரமான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 6ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. நண்பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு மேல் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேள தாளம் முழங்க சண்முகவிலாசம் வந்தடைந்தார்.

இதையடுத்து அங்கு  சிறப்பு தீபாராதனை நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதராக அவதரித்த முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு உருவெடுத்து வரும் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக மாலை 4 மணிக்கு கடற்கரைக்கு பக்தர்கள் புடைசூழ ஜெயந்திநாதர் எழுந்தருளினார். முதலில் கஜமுகன் வடிவெடுத்து வந்த சூரனை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் சரணகோஷம் முழங்க மாலை 4.35 மணிக்கு ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து சிங்கமுகசூரனை மாலை 5 மணிக்கு வதம் செய்தார். மாலை 5.10 மணிக்கு தனது சுயவடிவில் உருவெடுத்த  சூரபத்மனை அன்னை பார்வதி கொடுத்த சக்திவேலால் சம்ஹாரம் செய்தார் முருகப் பெருமான். மேலும் சேவல் வடிவெடுத்த சூரனையும் வதம் செய்து, சூரனை சேவல் கொடியாகவும், மயிலாகவும் ஏற்றார். இதை லட்சக்கணக்கான பக்தர்கள் நேரடியாகவும், திருக்கோயில் நிர்வாகம் சார்பில்  6 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த எல்இடி டி.வி.க்கள் மூலமாகவும் தரிசித்தனர். பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள், சூரசம்ஹாரத்தை கண்டதும் கடலில் நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.
 
பின்னர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 9 மணிக்கு  108 மகா மண்டபத்தை சுவாமி வந்தடைந்ததும் யகா சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட வெள்ளி, செம்பு யந்திர தகடுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு முதல்முறையாக கடற்கரையில் சூரசம்ஹாரம் நடந்ததால் அதை காண்பதற்காக நேற்று அதிகாலை முதலே பஸ், ரயில்கள், கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்கள் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடற்கரையில் தலையா, கடல் அலையா என்று கூறும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளித்தது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Jayanthinathar , Jayantinathar made Samharam to play Arogara Kosham in Tiruchendur; Darshan of lakhs on the beach after 2 years
× RELATED சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி...