பர்கூர் மலைப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

ஈரோடு: அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் 2வது நாளாக ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்து வருகிறார். அவர் இன்று 2வது நாளாக தாமரைகரை, கொங்காடை, ஈரெட்டி, கடை ஈரெட்டி, தேவர்மலை, எலச்சிபாளையம் உள்ளிட்ட மலைகிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம்வழங்கினார். எலச்சிபாளையத்தில் அமைச்சர் ஆய்வு செய்தபோது, அங்கு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் அபிதா (18), சிநேகா (17) ஆகியோருக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கி, அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, தாமரைகரையில் இருந்து ஈரெட்டி, கடை ஈரெட்டி, தேவர் மலை கிராமங்களுக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைச்சர் மா.சுப்ரமணியம் ஓடியும் (ஜாகிங்), நடைப்பயணமாகவும் (வாக்கிங்) சென்றார். அவருடன் வனத்துறை அதிகாரிகள், போலீசார் சென்றனர். அவர் மலை கிராமங்களில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அங்கு காலணி இல்லாமல் நடந்து சென்ற குழந்தைகளுக்கு தனது காரில் வைத்திருந்த புதிய காலணிகளை வழங்கினார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் பர்கூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள், கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கினார்.

Related Stories: