பழநி அருகே பரபரப்பு தோட்ட காவலாளி மீது துப்பாக்கிச்சூடு

பழநி: பழநி அருகே பெத்தநாயக்கன்பட்டியில் தோட்ட காவலாளியை துப்பாக்கியால் சுட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பெத்தநாயக்கன்பட்டியில் சுரேஷ் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு கும்பகோணத்தை சேர்ந்த கார்த்தி (24) என்பவர் காவலாளியாக உள்ளார். நேற்று நள்ளிரவு இவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் கார்த்தியின் இடது தோள்பட்டைக்கு கீழ் பகுதியில் குண்டு பாய்ந்தது.

படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு உடனடியாக பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் டிஎஸ்பி சிவசக்தி தலைமையில் போலீசார் சென்று துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, முயல் வேட்டை போன்றவற்றில் ஈடுபட்டவர்களால் தவறுதலாக சுடப்பட்டரா, முன்விரோத தகராறு காரணமாக சுடப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். காயம்பட்டவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் குண்டுவின் தன்மையை பொருத்து எந்த வகை துப்பாக்கியால் சுடப்பட்டார் என்பது தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: