மாஜி வேளாண் அதிகாரி மர்ம சாவு: வேடசந்தூரில் பரபரப்பு

வேடசந்தூர்: வேடசந்தூரில் வீட்டில் தனியாக வசித்துவந்த ஓய்வுப்பெற்ற வேளாண் அதிகாரி மர்மமாக இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் நேருஜி நகர் முல்லை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (81). இவர் வேளாண் உதவியாளராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவரது மனைவி விஜயலட்சுமி (50). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மூத்த மகன் சுரேஷ்குமார் (29). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், இளைய மகன் தினேஷ் கண்ணன் (27) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.

இதனால் கோபாலகிருஷ்ணன் தனது சொந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இவரிடம் ஏராளமான பணம், நகை, சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை கோபாலகிருஷ்ணன் திடீரென வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபாலகிருஷ்ணன் தம்பி வெங்கடசாமி கொடுத்த புகாரில், ‘தனது அண்ணன் இறப்பில் மர்மம் உள்ளது. உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: