இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

சாயல்குடி: தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி விழா, 60வது ஆண்டு குருபூஜை விழாவின் முதல் நாள் கொண்டாடப்பட்டது. திருவிளக்கு பூஜை, தேவர் ரதம் வீதி உலா மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. 2ம் நாளான நேற்று காலை யாகசாலை பூஜை, ஆன்மீக சொற்பொழிவு, பஜனை, கூட்டு பிரார்த்தனையுடன் லட்சார்ச்சனை நடந்தது. 3ம் நாளான இன்று தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் இன்று காலை 9.30 மணியளவில் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதையடுத்து அமைச்சர்கள் பசும்பொன் நினைவாலயத்தில் உள்ள தேவரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் நினைவக பொறுப்பாளர் காந்தி மீனாளை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

இதன்பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தேவர் திருமகனாருக்கு ஆண்டுதோறும் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மரியாதை செலுத்துவார். உடல்நிலை சரியில்லாததால் இந்தாண்டுஅவரால் வர முடியவில்லை. அதே போல், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முன்பு கலைஞரும் மரியாதை செலுத்துவார். அவருடன் நானும் வந்துள்ளேன். இன்று தமிழக அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் மரியாதை செலுத்தினோம். மண்ணுக்குள் மாணிக்கங்கள் புதைந்துள்ளது என்று அண்ணா கூறினார். அண்ணா சொன்னதைப் போல பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் முத்துராமலிங்கத் தேவர். அவர் சொன்னதைப் போல மண்ணுக்குள் இருந்த மாணிக்கங்களை வெளிக்கொண்டு வந்து அரசியலிலும், வாழ்விலும் ஜொலிக்க செய்தவர்’ என்றார்.

Related Stories: