×

விருதுநகர் , இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

விருதுநகர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்சேகர்பாபு ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் (Master Plan) விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

2021 – 2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது “திருக்கோயிலுக்குப் பெருமளவில் வருகைதரும் பக்தர்களுக்கான முழுமையான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த 40 முதுநிலைத் திருக்கோயில்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் (Master Plan) வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது”.

அதன்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், இன்று இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு வருகை தந்து, ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; வல்லமை பெற்ற அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலுக்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் பக்தர்கள் வருகை தந்து செல்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்ற இதுபோன்ற திருக்கோயில்களை ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்திட உத்தரவிட்டிருக்கின்றார்.

அந்த வகையில் ஏற்கனவே திருச்செந்தூர் திருக்கோயில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு முதலமைச்சரின் பொற்கரங்களால் ரூபாய் 300 கோடி செலவில் அதாவது ரூ.200 கோடி எச்சிஎல் பங்குடனும், ரூ. 100 கோடி  இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் நிதியோடு பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோயிலுக்கு 130 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழக முதல்வர் அந்த பெருந்திட்ட வரைவினை இரண்டு முறை பார்த்து  சொல்லிய சிறு சிறு திருத்தங்களை சரிசெய்து தற்போது அந்த பணியும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து திருத்தணி, ஸ்ரீரங்கம், சமயபுரம், மாரியம்மன், வயலூர் முருகன் பழனி தண்டாயுதபாணி, மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களிலும் பெருந்திட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இருக்கங்குடி மாரியம்மன் திருக்கோவிலில் பெருந்திட்ட பணியை நம்முடைய துறை செயலாளர் மேற்பார்வையில் துறையினுடைய ஆணையாளர் மற்றும் கூடுதல் ஆணையர்கள் அதிக கவனம் செலுத்தி பெருந்திட்ட வரைவை முதற்கட்டமாக தயாரித்து இருக்கின்றார்கள். அதை இன்றைக்கு துறை செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருடன் பார்வையிட்டு இருக்கின்றோம்.

குறிப்பாக இந்த பெருந்திட்ட வரைவில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்களாக மூன்று இடங்களில் நுழைவாயில்களை ஏற்படுத்த இருக்கின்றோம். முக்கிய பாதையில் இருந்து திருக்கோவிலுக்கு வருகின்ற பாதை 600 மீட்டர் அளவிற்கு புதிய பாதையை அமைக்க இருக்கின்றோம். வரும் வழியில் இருக்கின்ற தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது.

இங்கு 98 விருந்து மண்டபங்கள், ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்த வருகின்றவர்களுக்கு சுகாதாரமான முறையில் இரண்டு ஸ்லேட்டர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொங்கல் இடும் வகையில் பொங்கல் மண்டபமும், பக்தர்கள் தங்குவதற்கு 40 குளிர்சாதன அறைகளும், 40 குளிர்சாதனமற்ற அறைகளும்  அமைக்கப்படுகிறது.

 இந்த திருக்கோயிலில் இருக்கின்ற கடைகளை ஒரு பகுதியாக அமைத்து தந்து, வியாபார பெருமக்களுக்கு பாதிப்பு இல்லாத அளவில் குறைந்த வாடகையில், அதே நேரத்தில் வருகின்ற பக்தர்களுக்கு அதிக விலையில் பொருட்களை விற்கின்றார்கள் என்ற நிலையில்லாமல் வியாபார பெருமக்களுக்கும் பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்க திட்டமிட்டு இருக்கின்றோம்.

ஏற்கனவே பெருந்திட்ட வரைவு திட்டத்தில் எடுத்துக்கொண்ட பணிகளில் இப்போது கோயில் உள்ளே இருக்கின்ற உற்சவர் மண்டபம் 40 லட்சம் ரூபாயிலும், முடிகாணிக்கை செலுத்துகின்ற மண்டபம் ரூபாய் 2.25 கோடியிலும், மற்றொரு மண்டபம் 3 கோடி ரூபாயிலும் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

பெருந்திட்டப் பணி என்பது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அந்த பெருந்திட்டப் பணிகளை இன்னும் அதிக வேகத்தில் கொண்டு சென்று மூன்று ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்தமாக இந்த திருக்கோவிலின் வடிவம் மாறி, பக்தர்கள் வருகின்ற போது எல்லா நிலையிலேயும் இலகுவான தரிசனத்திற்கும், எத்தனை ஆயிரம் பக்தர்கள் ஒன்றாக வந்தாலும் தங்குவதற்கு உண்டான வசதிகள் அதேபோல் வருகின்ற வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடம் போன்ற அனைத்தையும் ஏற்படுத்தித் தருவதற்கு இன்றைக்கு ஆலோசிக்கப்பட்டு இருக்கின்றது. பிரசித்தி பெற்ற நிலையில் உள்ள திருக்கோயில்களில் உள்ள அனைத்து வசதிகளும் கூடிய ஒரு திருக்கோயிலாக இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலை நிச்சயம் மாற்றிக் காட்டுவோம் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிக்குமார், மதுரை மண்டல இணை ஆணையர் திரு.கே.செல்லதுரை, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் நிர்மலா, திருக்கோயில் பரம்பரை அறகாவலர் சி.ரா.மு ராமமூர்த்தி, செயல் அலுவலர் ஆர். கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Minister ,Segarbabu ,Virudunagar ,Ithankudi Mariamman Temple , Regarding the works to be carried out at Mariyamman Temple, Istankudi, Virudhunagar District Minister Shekharbabu study
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...